என் மலர்
செய்திகள்

பா.ம.க.வேட்பாளர் கே.எல்.இளவழகன் திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்தபோது எடுத்தபடம்
வேலைவாய்ப்பை உருவாக்க தொழிற்பேட்டை கொண்டு வருவேன் - ஆற்காடு தொகுதி பா.ம.க .வேட்பாளர் வாக்குறுதி
ஆற்காடு தொகுதியில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க தொழிற்பேட்டை கொண்டு வருவேன் என பா.ம.க.வேட்பாளர் கே.எல்.இளவழகன் வாக்குறுதி அளித்தார்.
ஆற்காடு:
ஆற்காடு தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் பா.ம.க.வை சேர்ந்த கே.எல்.இளவழகன் போட்டியிடுகிறார். அவர் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகிறார்.
நேற்று ஆற்காடு தொகுதி திமிரி கிழக்கு ஒன்றியம் கலவை கூட்டுரோடு, கணியந்தாங்கல், அல்லாலச்சேரி, நாகலேரி, சென்னலேரி, பரிக்கல்பட்டு, சென்னசமுத்திரம், மாந்தாங்கல், மேல்நெல்லி, மருதம், இருங்கூர், தட்டச்சேரி, கண்ணிகாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்குச் சென்று வேன் மூலமாகவும் நடந்து சென்றும் வாக்குகள் சேகரித்தார்.
அப்போது அவர் பேசுகையில், ‘‘ நான் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது இப்பகுதிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். மேலும் ஆரூர்- பொன்னம்பலம் இடையே தரைப்பாலம் உள்ளது .மழைக்காலங்களில் இந்த தரைப்பாலத்திற்கு மேல் 2 அடி உயரத்திற்கு தண்ணீர் செல்வதால் பள்ளி மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள், வியாபாரிகள் நடந்தோ அல்லது வாகனம் மூலமோ செல்வதற்கு சிரமமாக உள்ளது. அதனை போக்க மேம்பாலம் கட்ட ஆவண செய்வேன்.
மேலும் இப்பகுதியில் ஏழை மாணவர்கள் படித்து பயன்பெற அரசு கலைக்கல்லூரி கொண்டு வருவேன். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட தொழிற்பேட்டை கொண்டு வருவேன். இப்பகுதியிலுள்ள ஏரி, குளங்கள் தூர்வாரி விவசாய உற்பத்தியை பெருக்க பாடுபடுவேன். எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
பிரசாரத்தில் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர்கள் சொரையூர் குமார் (திமிரி கிழக்கு), ந.வ கிருஷ்ணன் (தாமரைப்பாக்கம் மேற்கு), வளவனூர் அன்பழகன் (ஆற்காடு கிழக்கு)ஒன்றிய அவைத்தலைவர் ரங்கநாதன், ஆற்காடு நகர செயலாளர் சங்கர், பா.ம.க.வை சேர்ந்த மாநில நிர்வாகியும் ஆற்காடு தொகுதி பொறுப்பாளருமான எம்.கே.முரளி, மாவட்ட செயலாளர் சண்முகம், நிர்வாகி மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், சுரேஷ், விக்ரமன், பா.ஜ.க.வை சேர்ந்த மனோகரன், பிரேம மாலதி, ஜெயலலிதா , ஆனந்தன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story






