என் மலர்
செய்திகள்

நந்தகுமார் எம்.எல்.ஏ. இஸ்லாமியர்களிடம் வாக்கு சேகரித்தபோது எடுத்த படம்.
இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது தி.மு.க. தான் - அணைக்கட்டு தி.மு.க. வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. பேச்சு
இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக என்றும் இருப்பது தி.மு.க. தான் என அணைக்கட்டு தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. கூறினார்.
அணைக்கட்டு:
அணைக்கட்டு தொகுதி தி.மு.க. வேட்பாளர் ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ. நேற்று வெட்டுவாணம் எல்லையம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு அந்த பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது விதவைப் பெண் ஒருவர் தனக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை. இதனால் தனது மகன், மகளுடன் கஷ்டப்படுவதாக தெரிவித்தார். அவரை தனது வாகனத்தில் ஏற்றி குறைகளை கேட்டறிந்த நந்தகுமார் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பின்னர் கலைவாணி என்ற பெண் தன்னுடைய கணவர் இறந்து விட்டதாகவும், சத்துணவு உதவியாளர் பணி தனக்கு வழங்காமல், ரூ.4 லட்சம் வாங்கிக் கொண்டு வேறு ஒரு பெண்ணுக்கு வழங்கி விட்டதாகவும் கூறினார். இதனைக் கேட்ட அவர், கணவரை இழந்து பொருளாதார ரீதியாக கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். அவரிடம் லஞ்சம் கேட்கிறார்கள். இது தான் அ.தி.மு.க. அரசு. இதற்கெல்லாம் தி.மு.க. ஆட்சி வந்தவுடன் முடிவு கட்டப்படும். அணைக்கட்டு தொகுதியில் லஞ்சம் வாங்காமல் அனைவருக்கும் வேலை வாங்கி கொடுப்பேன் என்றார்.
தொடர்ந்து பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதியில் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பொதுமக்களிடம் உங்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என்றார். பின்னர் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது அவர் இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருப்பது என்றுமே தி.மு.க. தான் என்றார்.
பிரசாரத்தின்போது ஒன்றிய பொறுப்பாளர்கள் பாபு, குமரபாண்டியன், பள்ளிகொண்டா பேரூராட்சி செயலாளர் செல்வம், மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் ஜாகீர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி பொறுப்பாளர் கோட்டி மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






