என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கந்தர்வகோட்டை அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற ரூ.5.91 கோடி தங்க நகைகள் சிக்கியது

    கந்தர்வகோட்டை அருகே இன்று உரிய ஆவணம் இன்றி எடுத்து சென்ற ரூ.5.91 கோடி தங்க நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    கந்தர்வகோட்டை:

    தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி வாக்களர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இவர்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில் வாகன சோதனை நடத்தி உரிய ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

    அந்த வகையில் இன்று காலை கந்தர்வக்கோட்டை அருகே தச்சன்குறிச்சி என்ற இடத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரூ.5.91 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் இருந்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து அந்த நகைகளை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனுக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி., காரில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார். இதில் காரை ஓட்டி வந்தவர் சேலம் மாவட்டத்தை சேர்ந்த மோகன் என்றும், அவருக்கு துணையாக வந்தவர் சந்தோஷ்குமார் என்பதும் தெரிந்தது.

    இவர்கள் பெங்களூரில் இருந்து சேலம், தஞ்சை, பட்டுக்கோட்டை, குடந்தை ஆகிய பகுதிகளில் உள்ள பிரபல நகைக்கடைகளுக்கு இந்த நகையை கொண்டு சென்றது தெரியவந்தது.

    இதனை தொடர்ந்து பறிமுதல் செய்த நகைகளை வருமானவரி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். கந்தர்வகோட்டையில் ரூ.5.91 கோடி தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    Next Story
    ×