search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலை, குடோன் தரைமட்டமானதை படத்தில் காணலாம்.
    X
    வெடி விபத்து நடந்த பட்டாசு ஆலை, குடோன் தரைமட்டமானதை படத்தில் காணலாம்.

    அரியாங்குப்பம் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து

    அரியாங்குப்பம் அருகே நள்ளிரவில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து நடந்தது. இதில் வெடிமருந்து குடோன் தரைமட்டமானது.
    அரியாங்குப்பம்:

    புதுவை மாநிலம் அரியாங்குப்பத்தை அடுத்த தமிழக பகுதியான நல்லப்பரெட்டிபாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் சீத்தாராமன் (வயது 45). இவர் அதே பகுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள தென்னந்தோப்புக்கு மத்தியில் சிமெண்டு அட்டையிலான கூரை அமைக்கப்பட்ட சிறிய அறையில் பட்டாசு ஆலை நடத்தி வந்தார். இந்த ஆலையின் ஒரு பகுதியை வெடிமருந்து குடோனாக பயன்படுத்தி வந்தார்.

    இந்த பட்டாசு ஆலையில் ஆண்கள், பெண்கள் என 5-க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். அவர்கள் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் பட்டாசு தயாரிக்கும் வேலைகளை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டனர்.

    இந்த நிலையில் நள்ளிரவு 12 மணிக்கு மேல் தென்னந்தோப்பு பகுதியில் பயங்கர வெடி சத்தம் கேட்டது. நேற்று முன்தினம் மகா சிவராத்திரி என்பதால் அப்பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் விடிய விடிய பூஜைகள் நடந்தது. இதனால் வாண வேடிக்கை ஏதேனும் நடக்கிறதா? என அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தனர்.

    அப்போது தென்னந்தோப்பு பகுதியில் இருந்து தொடர்ந்து வெடி சத்தமும் புகை மூட்டமும் காணப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த சிலர் அந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது பட்டாசு ஆலை மற்றும் குடோனின் சுவர்கள் நாலாபுறமும் சிதறி தரைமட்டாகி இருந்தன.

    மேலும் குடோனின் அருகில் இருந்த தென்னை, தேக்கு உள்ளிட்ட மரங்கள் மற்றும் காய்கறி செடிகள் எரிந்து நாசமாகியிருந்தது.

    இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து குடோனில் பற்றி எரிந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்து அணைத்தனர். ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசார் வெடி விபத்து நடந்த இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.

    இந்த பயங்கர வெடிவிபத்து குறித்து போலீசில் பட்டாசு ஆலை உரிமையாளர் சீத்தாராமன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    மின்கசிவு அல்லது அழுத்தம், உராய்வு காரணமாக இந்த பட்டாசுகள் வெடித்து பின்னர் குடோனில் வைத்திருந்த வெடிமருந்துகள் வெடித்ததா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    இந்த வெடி விபத்தால் பல ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகள் மற்றும் வெடி மருந்து, மூலப்பொருட்கள் நாசமானது. வெடி விபத்து நள்ளிரவில் ஏற்பட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை.
    Next Story
    ×