என் மலர்tooltip icon

    செய்திகள்

    புற்றுநோய் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் சண்முகசுந்தரம் பேசியபோது எடுத்த படம்.
    X
    புற்றுநோய் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலெக்டர் சண்முகசுந்தரம் பேசியபோது எடுத்த படம்.

    உணவு பழக்க வழக்கங்களை சரியாக கடைபிடித்தால் புற்றுநோயில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் - கலெக்டர் சண்முகசுந்தரம்

    உணவு பழக்க வழக்கங்களை சரியாக கடைபிடித்தால் புற்றுநோயில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என்று கலெக்டர் சண்முகசுந்தரம் பேசினார்.
    காட்பாடி:

    உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு அகில இந்திய அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சங்கம் சார்பில் வேலூர் மாவட்டத்தில் பணிபுரியும் பெண் போலீசாருக்கான புற்றுநோய் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடந்தது. வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். வேலூர் சரக டி.ஐ.ஜி. காமினி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் கனகவேல், ராஜவேலு ஆகியோர் புற்றுநோய் குறித்து விளக்க உரை ஆற்றினர்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் சண்முகசுந்தரம் பேசியதாவது:-

    பெண்கள் நாட்டின் கண்கள் என்பதை உணர்ந்து பெண் போலீசார் தங்கள் உடல் நிலையை பாதுகாத்துக் கொள்ளவேண்டும். பெண்களுக்கு புற்றுநோய், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் தொண்டை ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

    புற்று நோய் பாதித்தவர்கள் மனம் தளராமல் டாக்டரின் ஆலோசனை மற்றும் உணவு பழக்க வழக்கங்களை சரியாக கடைபிடித்தால் புற்று நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளலாம். பெண் போலீசார் பல்வேறு குடும்ப வேலைகளுக்கிடையே பணிபுரிந்து வருகிறார்கள்.

    ஒரு நாளைக்கு 5 கிலோமீட்டர் தொலைவு அல்லது ஒரு மணி நேரம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு சராசரியாக 6 முதல் 8 மணி நேரம் உறங்கவேண்டும். அதேபோல 18 முதல் 19 வயதில் கருவுறும் பெண்கள் உடல் பலவீனம் அடைவதால் பிரசவத்தின் போது உயிரிழப்பு அதிகமாக ஏற்படுகிறது.

    இந்த முகாமில் உள்ள அரசு டாக்டர்களிடம் பெண் போலீசார் தங்களுடைய சந்தேகங்களை கேட்டு அறிந்து தங்கள் குடும்பத்தினருக்கும், தாங்கள் பணிபுரியும் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தாய்மார்களுக்கும் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் பேசினார்.

    நிகழ்ச்சியில் டாக்டர்கள் ஜோதிவேல், மணிவண்ணன், சித்ரா, மாதுரி, துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் அசோகன், காட்பாடி தாசில்தார் பாலமுருகன் மற்றும் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், பெண் போலீசார் கலந்து கொண்டனர்.
    Next Story
    ×