search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெல்லை கலெக்டர் விஷ்ணு
    X
    நெல்லை கலெக்டர் விஷ்ணு

    நெல்லை மாவட்டத்தில் 316 பதற்றமான வாக்குச்சாவடிகள்- கலெக்டர் விஷ்ணு பேட்டி

    நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 316 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    2021 சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளை, அம்பை, ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட 5 தொகுதிகளில் விருப்பமனு தாக்கல் செய்ய மார்ச் 12 கடைசி தேதியாகும். மனுத்தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 19 ஆகும்.

    இதனையொட்டி நெல்லையில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லை தொகுதிக்கு சப்-கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி, பாளை தொகுதிக்கு மாநகராட்சி கமி‌ஷனர் கண்ணன், அம்பை தொகுதிக்கு சப்-கலெக்டர் பிரதீக் தயாள், நாங்குநேரி தொகுதிக்கு மாவட்ட வழங்கல் அலுவலர் குழந்தைசாமி, ராதாபுரம் தொகுதிக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் உஷா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    தேர்தலை சிறப்பாக நடத்துவதற்கு கொரோனா பரவலை கருத்தில் கொண்டு 1,050 பேருக்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை-408, அம்பை-356, பாளை-389, நாங்குநேரி-395, ராதாபுரம்-376 என மொத்தம் 1,924 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    தேர்தல் விதிமுறை மீறல் தொடர்பான புகார்களை விசாரிக்க கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டுள்ளது. இதுதவிர மாவட்டத்தில் பறக்கும் படை குழுக்கள், நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஆகியவை தலா 15 ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    இதுதவிர ஒவ்வொரு தொகுதிக்கும் தேர்தல் செலவு உள்ளிட்டவற்றை கண்காணிக்கும் குழுக்கள் மொத்தம் 10 ஏற்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்களை கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 425 8373 என்ற எண்ணிலும், 1950 என்ற தொலைபேசி எண்ணிலும் பதிவு செய்யலாம்.

    நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 316 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நெல்லை-88, அம்பை-49, பாளை-109, நாங்குநேரி-49, ராதாபுரம்-21 ஆகும்.

    கடந்த தேர்தலின்போது போடப்பட்ட வழக்குகள் மீதான விசாரணை தற்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபடுவதற்காக நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 9 ஆயிரத்து 736 தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    அவர்களுக்கு விரைவில் பயிற்சி வழங்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் நடத்தப்படும் தேர்தல் பிரசாரத்தை கண்காணிக்கவும் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது.

    பேட்டியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், மாநகராட்சி கமி‌ஷனர் கண்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், துணை கமி‌ஷனர் சீனிவாசன், சப்-கலெக்டர்கள் சிவ கிருஷ்ணமூர்த்தி, பிரதீக் தயாள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கணேஷ்குமார், தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் சாந்தி, மக்கள்-செய்தி தொடர்பு அலுவலர் நவாஸ் கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


    Next Story
    ×