என் மலர்
செய்திகள்

உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால் நாய் உயிரிழப்பு - டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை அருகே மேட்டுச்சக்கரகுப்பம் பகுதியில் கால்நடை மருத்துவமனை இயங்கி வருகிறது. சின்னமண்டலவாடி பகுதியை சேர்ந்த செல்வம் என்பவர் 1½ வயதுடைய ஜான்சி என்ற நாயை வளர்த்து வந்தார்.
திடீரென நாய்க்கு நேற்று அதிகாலை முதல் ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதனால் செல்வம் கால்நடை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அப்போது அங்கு இருந்த கால்நடை பெண் உதவியாளர், டாக்டர் 9 மணிக்கு வந்துவிடுவார் என்று கூறி அமர வைத்துள்ளார். ஆனால் நாய்க்கு ரத்தப்போக்கு அதிகரித்தது. காலை 11 மணி வரை டாக்டர் வராததால் செல்வம் திருப்பத்தூர் அருகே ஆசிரியர் நகர்ப்பகுதியில் உள்ள கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவமனைக்கு சென்றார். அங்கு டாக்டர்கள் நாய்க்கு குளுகோஸ் போட்டனர்.
பின்னர் நாயை வீட்டிற்கு அழைத்து சென்றபோது சிறிது நேரத்திலேயே நாய் உயிரிழந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம், சிகிச்சைக்காக அழைத்து சென்றபோது உரிய நேரத்தில் டாக்டர் இல்லாததாலும் முறையாக விரைந்து சிகிச்சை அளிக்கப்படாததாலும் நாய் இறந்து விட்டதாக வேலூர் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார்.
மேலும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என புகார் மனுவை பதிவு அஞ்சலில் நேற்று அனுப்பினார்.
மேலும் இதுகுறித்து திருப்பத்தூர் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.






