என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை தரக்கோரி முற்றுகை போராட்டம்
ஓக்கூர் தனியார் மின் ஆலை முன்பு சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை தரக்கோரி முற்றுகை போராட்டம் நடந்தது.
சிக்கல்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் ஒன்றியம் ஓக்கூர் ஊராட்சியில் தனியார் மின் ஆலை உள்ளது. இந்த ஆலையில் ஒப்பந்தம் அடிப்படையில் 30 சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். கொரோனா தொற்றால் ஆட்கள் குறைப்பு காரணமாக சுமைதூக்கும் தொழிலாளர்கள் பணியில் இருந்து நிறுத்தப்பட்டனர். இந்தநிலையில் பல்வேறு தளர்வுகளை தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால் தனியார் மின் ஆலையில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு பதிலாக வடமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்தி வேலை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும், வேலையில் இருந்து நிறுத்தப்பட்ட சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கோரியும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் குடும்பத்துடன் தனியார் மின் ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு சுமைதூக்கும் தொழிலாளர் சங்க தலைவர் திருக்குமார் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் முருகவேல், பொருளாளர் மணி மற்றும் பலர் கலந்துகொண்டு ஆலை நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
தகவல் அறிந்த ஓக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமாலா ரமேஷ், நாகூர் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுமைதூக்கும் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில் வருகிற 6-ந்தேதி கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் இந்த பிரச்சினை குறித்து அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடத்தி தீர்வு காணப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Next Story






