search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பயிரை அறுவடை செய்து களத்து மேட்டில் காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதை காணலாம்
    X
    பயிரை அறுவடை செய்து களத்து மேட்டில் காய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளதை காணலாம்

    மழையில் நனைந்த நெல்மணிகளை உலர வைக்கும் பணி மும்முரம்

    திருப்பத்தூரில் தொடர் மழை காரணமாக நீரில் மூழ்கிய நெல்மணிகளை அறுவடை செய்து அதை உலர வைக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளனர்.
    திருப்பத்தூர்:

    சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கனவே பெய்த பருவமழையை நம்பி விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் நெல் பயிரிட்டனர். இந்நிலையில் நெற்பயிர் அறுவடைக்கு தயாரான காலகட்டத்தில் புெரவி மற்றும் நிவர் புயல் காரணமாக 10நாட்களுக்கும் மேலாக தொடர் மழை பெய்தது. இதனால் சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி, சிவகங்கை, மானாமதுரை, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி சேதமானது.

    சில இடங்களில் நெற்பயிர் தரையில் சாய்ந்தும் போனது. இதையடுத்து விவசாயிகள் இந்த தண்ணீரை வெளியேற்றுவதற்காக டீசல் மோட்டார் மூலமும், கை இறவை கொண்டும் தண்ணீரை வெளியேற்றினர்.

    அதிலும் குறிப்பாக இளையான்குடி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக அங்கு பயிரிடப்பட்டிருந்த மிளகாய் மற்றும் நெல் பயிர்கள் முற்றிலும் சேதமானது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மழையில்லாமல் வெயில் அடித்ததால் விவசாயிகள் எஞ்சியுள்ள நெல் பயிரை அறுவடை செய்தனர். அதை களத்து மேட்டில் பிரித்தெடுத்து ஈரமான நெல்மணிகளை வெயிலில் உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுகுறித்து திருப்பத்தூர் அருகே வைரவன்பட்டி பகுதியில் நெல்மணிகளை உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது:-

    பருவ மழையை நம்பி விவசாய நிலத்தில் குறுகிய கால பயிர்களை பயிரிட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நேரத்தில் தொடர்ந்து பெய்த புயல் மழை காரணமாக பெரும்பாலான பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகி விட்டன. ஒரு சில பயிர் மறுபடியும் முளைக்க தொடங்கின. மீதமுள்ள பயிரை காப்பாற்றுவதற்காக மணிக்கு ரூ.500 வரை செலவு செய்து டீசல் மோட்டார் மூலம் தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டோம். இந்த வகையில் ரூ.3ஆயிரம் வரை செலவு ஆனது.

    மேலும் வயலில் தேங்கிய நீரை முற்றிலும் அப்புறப்படுத்திய பின்னர் ஆட்கள் மூலம் அறுவடை செய்து களத்து மேட்டில் உலர வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். எனினும் நெல் பயிர் நடவு, களை எடுத்தல் உள்ளிட்ட பணிக்காக ஏக்கருக்கு ரூ.25ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். தற்போது அறுவடை செய்துள்ள இந்த நெல்மணிகளை செலவு செய்த தொகைக்கு கூட வரவில்லை. ஏற்கனவே பயிர் காப்பீடு செய்துள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் விரைந்து இழப்பீடு தொகை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.
    Next Story
    ×