search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மக்காச்சோளம்
    X
    மக்காச்சோளம்

    சிவகாசி பகுதியில் தொடர் மழையால் 150 ஏக்கர் மக்காச்சோளம் நாசம் - இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

    சிவகாசி அருகே உள்ள கிராமங்களில் 150 ஏக்கரில் பயிரிடப்பட்ட மக்காச்சோளம் பருவம் தவறிய மழையால் நாசமானதால் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    சிவகாசி:

    சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிருஷ்ணபேரி, ஈஞ்சார், நடுவபட்டி, வடப்பட்டி, நாகலாபுரம், நிறைமதி உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 150 ஏக்கர் வரை அப்பகுதி விவசாயிகள் மக்காச்சோளம் பயிரிட்டனர்.

    ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்தனர். இந்த நிலையில் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கடந்த வாரம் தொடர்ச்சியாக மழை பெய்தது. இதனால் மக்காச்சோளங்கள் அனைத்தும் அழுகி நாசமானது. இதனால் விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கிருஷ்ணபேரியை சேர்ந்த விவசாயி அங்காளஈஸ்வரி கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தை கணக்கில் கொண்டு நாங்கள் மக்காசோளம் பயிரிடுவது வழக்கம். அதே போல் கடந்த ஆண்டும் மக்காசோளம் பயிரிட்டோம்.

    ஜனவரி மாதம் கடைசி வாரத்தில் அறுவடைக்காக காத்திருந்த நிலையில் தொடர்ந்து பருவம் தவறிய பெய்த மழையால் மக்காச்சோளம் அனைத்தும் நாசமானது. எங்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் நாங்கள் மக்காச்சோளம் பயிரிட்டோம். தற்போது அவை அனைத்தும் சேதமானது. எங்களை போல் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த பகுதியில் மக்காசோளம் பயிரிட்டு நஷ்டம் அடைந்துள்ளனர்.

    நாங்கள் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் முறைப்படி பதிவு செய்துள்ளோம். எங்கள் நிலத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே ஆய்வு செய்து எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

    இதில் கால தாமதம் ஏற்பட்டால் என்னை போன்ற பல விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு செய்து, உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×