search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அய்யலூர் சந்தையில் விற்பனைக்காக பெட்டிகளில் தக்காளி குவித்து வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    அய்யலூர் சந்தையில் விற்பனைக்காக பெட்டிகளில் தக்காளி குவித்து வைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    அய்யலூர் ஏலச்சந்தையில் வெளிமாநில தக்காளி வரத்தால் விலை வீழ்ச்சி

    அய்யலூர் சந்தையில் வெளிமாநில தக்காளி வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்தது.
    வடமதுரை:

    வடமதுரை அருகே உள்ள அய்யலூரில் தக்காளிக்கு என்று தனி ஏலச்சந்தை உள்ளது. தினமும் நடைபெறும் இந்த சந்தையில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு தக்காளிகள் பெட்டிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றது. திருவிழா மற்றும் முகூர்த்த நாட்களில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக 10 டன் வரை தக்காளிகள் விற்பனை நடைபெறும்.

    இதனால் வடமதுரை, அய்யலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் அதிக அளவில் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். அது மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளிமாநில தக்காளிகளும் இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் தக்காளி விலையை நிர்ணயிக்கும் முக்கிய சந்தையாக அய்யலூர் திகழ்ந்து வருகிறது.

    தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அய்யலூர் சந்தையில் உள்ளூர் தக்காளிகளின் வரத்து குறைந்துள்ளது. ஆனால் ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து அதிகரித்துள்ளது. பொதுவாக மழைக்காலங்களில் தக்காளியின் விலை உயர்ந்து காணப்படும். ஆனால் அதற்கு நேர்மாறாக தற்போது வெளிமாநில தக்காளி வரத்து காரணமாக ஏலச்சந்தையில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

    கடந்த வாரம் 15 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி ரூ.250 முதல் ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது தக்காளி விலை வீழ்ச்சி அடைந்து ஒரு பெட்டி ரூ.100 முதல் ரூ.150 வரை நேற்று விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×