search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேலநெட்டூர் கிராமத்தில் அம்மா மினி கிளினிக் தொடங்க இருந்த கட்டிடத்தை படத்தில் காணலாம்.
    X
    மேலநெட்டூர் கிராமத்தில் அம்மா மினி கிளினிக் தொடங்க இருந்த கட்டிடத்தை படத்தில் காணலாம்.

    அம்மா மினி கிளினிக் தொடங்குவது திடீர் நிறுத்தம் - கலெக்டரிடம் ஊராட்சி தலைவர் புகார்

    மேலநெட்டூரில் அம்மா மினிகிளினிக் தொடங்குவதை அதிகாரிகள் திடீரென்று நிறுத்தினர். இது தொடர்பாக ஊராட்சி தலைவர் கலெக்டரிடம் புகார் தெரிவித்து உள்ளார்.
    மானாமதுரை:

    மானாமதுரை அருகே மேலநெட்டூர் ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் ஆலம்பசேரி, காக்குடி, அரியனூர், மணக்குடி, நாடார் குடியிருப்பு, ஆலங்குளம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் திடீெரன்று காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட உடல்உபாதைகளால் அவதிப்படும் போது சுமார் 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மானாமதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு தான் சென்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் கிராம மக்கள் பயன்பெறுவதற்காக தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் அம்மா மினிகிளினிக் தொடங்கப்படும் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்படி மாநிலம் முழுவதும் மருத்துவ வசதி இ்ல்லாத கிராமங்களில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டு வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அம்மா மினி கிளினிக் தொடங்கப்பட்டு உள்ளது.

    இந்த அம்மா மினி கிளினிக் மேல நெட்டூர் கிராமத்திலும் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர். இதனால் அங்குள்ள சுகாதார நிலையத்தை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்து தயார் நிலையில் வைத்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் அம்மா மினி கிளினிக் அமைப்பதற்கான பணியை நிறுத்துமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர். இதையடுத்து அந்த பணி நிறுத்தப்பட்டது. இதனால் அந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து மேலநெட்டூர் ஊராட்சி தலைவர் சங்கீதா ராஜ்குமார் கூறும் போது, எங்கள் கிராமத்தில் அம்மா மினி கிளினிக் திறக்க இருந்த நேரத்தில் திடீெரன்று அதிகாரிகள் நிறுத்தி விட்டனர். அரசியல் காரணங்களால் அம்மா மினிகிளினிக்கை வேறு இடத்திற்கு கொண்டு செல்வதாக தெரிகிறது. இது குறித்து கிராம மக்கள் சார்பில் கலெக்டரிடம் புகார் தெரிவித்து உள்ளேன். புகாரை பெற்று கொண்ட கலெக்டர் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து உள்ளார். அவர் விரைந்து எங்கள் கிராமத்தில் அம்மா மினிகிளினிக்கை தொடங்க நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறோம் என்றார்.

    இது தொடர்பாக சிவகங்கை சுகாதாரத்துறை இணை இயக்குனர் யசோதாமணியிடம் கேட்ட போது, அம்மா மினி கிளினிக் தொடங்குவது குறித்து சம்பந்தப்பட்ட கிராமத்தில் ஆய்வு செய்தது உண்மை தான். இது போல் 4 கிராமங்களில் அம்மா மினி கிளினிக் அமைப்பது தொடர்பாக ஆய்வு செய்து கலெக்டரிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளோம். ஒரு இடத்தில் அம்மா மினி கிளினிக் அமைக்க 5 இடங்களில் ஆய்வு செய்வோம். அது போல் தான் இந்த கிராமத்திலும் ஆய்வு செய்து உள்ளோம். கலெக்டர் தான் எந்த கிராமத்தில் அம்மா மினி கிளினிக் தொடங்க வேண்டும் என முடிவு எடுப்பார் என்றார்.

    இது குறித்து அப்பகுதி கிராம மக்கள் கூறும் போது, தற்போது கிராம மக்களின் உடல்நலனை பேணும் வகையில் அம்மா மினிகிளினிக் திட்டம் கொண்டு வரப்பட்டு உள்ளது வரவேற்கத்தக்கது தான். இதனால் கிராமப்புற மக்களுக்கு மருத்துவ வசதி எளிதில் கிடைக்கும். எங்கள் கிராமத்துக்கு நிறுத்தப்பட்ட அம்மா மினி கிளினிக்கை மீண்டும் தொடங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
    Next Story
    ×