search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகர் கலெக்டர்
    X
    விருதுநகர் கலெக்டர்

    தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் மூலம் சிறுதானிய சாகுபடி விழிப்புணர்வு பிரசாரம் - கலெக்டர் தொடங்கி வைத்தார்

    சிறுதானிய உற்பத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கலெக்டர் கண்ணன் தெரிவித்தார்.
    விருதுநகர்:

    தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் சத்துமிகு தானியப் பயிர்களை விவசாயிகள் பயிரிடுவதன் அவசியம் குறித்து மாவட்டங்கள் தோறும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் 16 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த சாகுபடி பரப்பு மற்றும் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் சத்துமிக்க தானியங்கள் திட்டத்தின் கீழ் ரூ.72 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

    இதன் அடிப்படையில் பிரசார வாகனங்கள் மூலம் விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சோளம், கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு உள்ளிட்ட சிறு தானியங்கள் சாகுபடி மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

    மொத்தம் 13 பிரசார வாகனங்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டாரங்களில் விவசாயிகளிடம் சிறுதானிய பயிர்களை பயிரிடுவதன் அவசியம் மற்றும் மானிய திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.

    சிறுதானிய உணவுகளின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை அந்தந்த வட்டத்திற்குட்பட்ட வேளாண்மை உதவி இயக்குனர்கள் மேற்கொள்வார்கள். விவசாயிகள் சிறு தானியங்கள் பயிர் சாகுபடி செய்யும் தொழில்நுட்பத்தினை நன்கு அறிந்து சிறு தானியங்களை அதிக பரப்பில் பயிரிட்டு நல்ல மகசூலை பெற வேண்டும்.

    முன்னதாக கலெக்டர் அலுவலக வளாகத்தில் பிரசார வாகனத்தை கலெக்டர் கண்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் விவசாயிகளிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ராமசுப்பிரமணியன், வேளாண்மை இணை இயக்குனர் உத்தண்ட ராமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்
    Next Story
    ×