என் மலர்
செய்திகள்

எழுவணி கண்மாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறிச் செல்வதை படத்தில் காணலாம்.
நரிக்குடி பகுதியில் பலத்த மழை: 5 கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது
நரிக்குடி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக 5 கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் மழைநீர் வீணாக வெளியேறியது.
காரியாபட்டி:
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் இரவு பரவலாக பலத்த மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்த நிலையில் பலத்த மழையால் நரிக்குடி அருகே எழுவணி, ஆயகுளம், புதுக்குளம், வந்தவாசி, காரியாபட்டி அருகே தொட்டியங்குளம் ஆகிய கிராமங்களில் உள்ள கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் முழுவதும் வீணாக வெளியேறிச் சென்று விட்டது.
மேலும் இந்த தண்ணீர் முழுவதும் அருகில் உள்ள வயல் வெளிகளில் பாய்ந்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
மழைக்காலத்திற்கு முன்பே இந்த கண்மாய்களை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி இருந்தால் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி இருக்காது. விவசாயிகளுக்கும் பலன் அளித்திருக்கும்.
ஆனால் இம்மாவட்டத்தில் பெரும்பாலான கண்மாய்கள் தூர்வாரப்படவில்லை. கரைகள் பலப்படுத்தப்பட வில்லை. எனவே கண்மாய்களை தூர்வாரி கரையை பலப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
அதிகாரிகளை நியமித்து மாவட்டம் முழுவதும் உள்ள கண்மாய்கள் குறித்து ஆய்வு செய்து அதனை தூர்வாரி கரையை பலப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Next Story