search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நெடுவாசலில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் வீணாகி வரும் விவசாயிகளது நெல்லை படத்தில் காணலாம்.
    X
    நெடுவாசலில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் வீணாகி வரும் விவசாயிகளது நெல்லை படத்தில் காணலாம்.

    நெடுவாசலில் திறக்கப்படாத கொள்முதல் நிலையம்: மழையில் நனைந்து வீணாகும் நெல்மணிகள் - விவசாயிகள் கவலை

    நெடுவாசலில் திறக்கப்படாத நெல் கொள்முதல் நிலையத்தால் நெல்மணிகள் மழையில் நனைந்து வீணாகிறது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    வடகாடு:

    புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள நெடுவாசல் கிழக்கு பகுதியில் அய்யனார் கோவில் திடல் அருகே நெல்கொள்முதல் நிலையம் உள்ளது. இந்த கொள்முதல் நிலையம் கடந்த 3 வாரங்களுக்கு முன்பு மூடப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த கொள்முதல் நிலையத்தை நம்பி அறுவடை செய்த விவசாயிகள் நெல் மணிகளை இப்பகுதியில் கொண்டு வந்து குவித்து வைத்துள்ளனர். அதன்மீது தார்பாய்கள் மற்றும் சாக்குகளை கொண்டு மூடி வைத்துள்ளனர்.

    தற்போது வடகாடு பகுதியில் விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் குவித்து வைக்கப்பட்டுள்ள நெல்லுக்குள் தண்ணீர் புகுந்து நனைந்து விட்டது. இதனால், கவலை அடைந்த விவசாயிகள் கொள்முதல் நிலையத்திற்கு தினமும் வந்து வெயில் அடிக்கும் நேரங்களில் நெல்லை உலர வைப்பதும், பின்னர் மாலையில் மூடி வைப்பதுமாக உள்ளனர்.

    மேலும், மழையில் அதிகளவு நனைந்த நெல்மணிகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது. இதனால், என்ன செய்வது என்று தெரியாமல் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து விவசாயி சிங்காரவேல் கூறுகையில், தனது வயலில் அறுவடை செய்த சுமார் 60 மூட்டைகள் வரக்கூடிய நெல்லை இங்கு கொண்டு வந்தேன். ஆனால், நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்படாததால் மழையில் நனைந்து வீணாகி வருகிறது. தற்போது விட்டு, விட்டு மழை பெய்து வருவதால் நெல்லை உலர வைக்கவும் முடியவில்லை. இதனால், நெல்மணிகள் அழுகியும், முளைத்தும் வருகிறது. எனவே, தாமதம் செய்யாமல் கொள்முதல் நிலையத்தை திறந்து நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். இல்லையென்றால் நெல்லுக்கான இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினார்.
    Next Story
    ×