என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
முறைகேடாக வீட்டுமனை வாங்கி கொடுத்தவரை கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியல்
கூத்தாநல்லூர் அருகே முறைகேடாக வீட்டுமனை வாங்கி கொடுத்தவரை கைது செய்யக்கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூத்தாநல்லூர்:
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலம் புனவாசல் தெருவை சேர்ந்த 11 பேரிடம் அதே கிராமத்தை சேர்ந்த தாமரைச்செல்வன் என்பவர் தலா ரூ.10 ஆயிரம் வாங்கி கொண்டு அரசின் இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தில் முறைகேடாக வீட்டுமனை வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட 11 பேருக்கும் வீட்டு மனை அளவீடு செய்வதற்காக வருவாய்த்துறை அதிகாரிகள் புனவாசல் கிராமத்துக்கு சென்றனர். அப்போது அதிகாரிகள் பொக்லின் எந்திரம் கொண்டு இடத்தை சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர். அப்போது, வீட்டு மனை வழங்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி கிராம மக்கள் அளவீடு செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிகாரிகள் இடத்தை அளவீடு செய்யாமல் திரும்பி சென்றனர்.
இதனிடையே தன்னை புனவாசல் கிராமத்தை சேர்ந்த 8 பேர் மிரட்டுவதாக முதல்-அமைச்சர் தனிப்பிரிவுக்கு தாமரைச்செல்வன் புகார் மனு அனுப்பினார்.
இந்த புகார் மனுவின் நகல் போலீசாருக்கு விசாரணை நடத்துவதற்காக அனுப்பப்பட்டுள்ளது. இதை அறிந்த புனவாசல் கிராம மக்கள் தாமரைச்செல்வனை யாரும் மிரட்டவில்லை, அது பொய்யான புகார் என்று கூறியும், வீடு இல்லாதவர்களுக்கு வீடு வாங்கி தராமல், வீடு இருப்பவர்களிடம் ரூ.10 ஆயிரம் பெற்றுக்கொண்டு முறைகேடாக வீட்டு மனை வாங்கி கொடுத்த தாமரைச்செல்வனை கைது செய்ய வலியுறுத்தியும், புனவாசல் கிராம மக்கள் நேற்று வடபாதிமங்கலம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கூத்தாநல்லூர் தாசில்தார் ஜீவானந்தம், மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தினேஷ்குமார் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.
இதனால் கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியல் காரணமாக வடபாதிமங்கலம்-கூத்தாநல்லூர் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story