என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    கும்பகோணம் அருகே முன்விரோதத்தில் தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை

    கும்பகோணம் அருகே முன்விரோதம் காரணமாக தொழிலாளி சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    திருப்பனந்தாள்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் துலுக்கவேலி தோப்புத்தெருவை சேர்ந்தவர் பூமிநாதன் மகன்கள் அருண்குமார்(வயது 28), அரவிந்த்(25). அதே பகுதியை சேர்ந்த ரவி மகன் சந்தோஷ்(22). கூலி தொழிலாளர்களான இவர்கள் மூவரும் நேற்று மாலை அதே பகுதியில் உள்ள அய்யாகோயில் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தனர்.

    அப்போது சோழபுரம் பெரியார் நகரைச் சேர்ந்த காரல்மார்க்ஸ்(30) மற்றும் அவரது நண்பர்கள் ராஜேஷ், நரேஷ், பங்கு சதீஷ் ஆகிய நால்வரும் சேர்ந்து அருண்குமார், அரவிந்த், சந்தோஷ் ஆகியோரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

    இதில் அருண்குமார் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் இருந்த அரவிந்த் மற்றும் சந்தோஷ் ஆகிய இருவரும் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    அரிவாளால் வெட்டிய காரல்மார்க்ஸ் உள்பட 4 பேரும் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் விசாரணையில் கொலை செய்யப்பட்ட அருண்குமாருக்கும், காரல்மார்க்சுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாகவும், இந்த முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளதும் தெரிய வந்தது.

    தலைமறைவான காரல்மார்க்ஸ் உள்பட 4 பேரையும் திருப்பனந்தாள் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×