என் மலர்tooltip icon

    செய்திகள்

    தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ள நெற்பயிர்களை விவசாயிகள் கையில் எடுத்து காட்டியதை படத்தில் காணலாம்
    X
    தண்ணீரில் மூழ்கி அழுகும் நிலையில் உள்ள நெற்பயிர்களை விவசாயிகள் கையில் எடுத்து காட்டியதை படத்தில் காணலாம்

    மயிலாடுதுறையில் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் அழுகும் அபாயம் - இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை

    மயிலாடுதுறையில் கொட்டித்தீர்த்த கனமழையால் நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளது. எனவே உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் பல இடங்களில் விளை நிலங்கள் நீரில் மூழ்கி உள்ளன. ஆறுகள், ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    மயிலாடுதுறை அருகே உள்ள நல்லத்துக்குடி, கோடங்குடி, செருதியூர் ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு வடிகாலாக மஞ்சளாறு உள்ளது. இந்த மஞ்சள் ஆற்றில் நீர் நிரம்பி செல்வதாலும் நல்லத்துக்குடி பகுதியில் வடிகால் வாய்க்கால்கள் சரிவர தூர்வாரப்படாததாலும் 350 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. கடந்த 5 நாட்களாக நீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்கள் அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். நல்லத்துக்குடி பகுதியில் வடிகால்களை உடனடியாக சீரமைத்து நீரில் மூழ்கியுள்ள நெற்பயிர்களை காப்பாற்ற வேண்டும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதைப்போல உளுத்துக்குப்பை, கடுவங்குடி, அருவாப்பாடி, ஆனதாண்டவபுரம் ஆகிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

    பொறையாறு அருகே உள்ள திருக்கடையூர் பகுதியில் கொட்டித்தீர்த்த பலத்த மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. திருக்கடையூர் பகுதியில் தாழ்வான இடங்களை மழைநீர் சூழ்ந்து உள்ளது. திருக்கடையூர், டீ.மணல்மேடு, கிள்ளியூர், மாத்தூர், பிள்ளைபெருமாநல்லூர், ஆக்கூர், கிடங்கல், மாமாகுடி, காலமநல்லூர், மருதம்பள்ளம், மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் பயிர் செய்த பல ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் வெள்ளநீர் இடுப்பு அளவு சூழ்ந்து உள்ளதால் கதிர் வரும் நிலையில் உள்ள நெற்பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளது. நீரில் மூழ்கிய பயிர்களை வேளாண்மை உதவி இயக்குனர் தாமஸ், பாரம்பரிய நெல் சாகுபடி திட்ட ஒருங்கிணைப்பாளர் செழியன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். அப்போது அவரிடம் விவசாயிகள் வயல்களில் சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    கொள்ளிடம் அருகே பழையபாளையம், வேட்டங்குடி, கடைவாசல், மகாராஜபுரம், பச்சைபெருமாநல்லூர், ஆலங்காடு, திருக்கருகாவூர் உள்ளிட்ட 10 கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.

    இந்த கிராமங்களில் சுமார் 15,000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன. தற்பொழுது நீரில் மூழ்கி உள்ள நெற்பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். இப்பகுதியில் வடிகால் வாய்க்கால்கள் சரியாக தூர்வாரப்படாததால் தண்ணீர் வடிய குறைந்தது ஒரு வாரம் ஆகும் என கூறப்படுகிறது.

    இது குறித்து கொள்ளிடம் ஒன்றியக்குழு உறுப்பினர் சுகன்யாபிரேம்குமார் கூறியதாவது:-

    விவசாயிகள் ஒரு ஏக்கர் சம்பா சாகுபடி செய்ய குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரம் செலவு ஆகும். தொடர்ந்து பெய்த கனமழையால் சாகுபடி செய்த அனைத்து சம்பா பயிர்களும் அழுகும் நிலையில் உள்ளது. எனவே விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வீதம் இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×