என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகூர் தர்கா குளம் கீழ்கரை பகுதியில் உள்ள சாலை உள்வாங்கி இருப்பதை படத்தில் காணலாம்.
    X
    நாகூர் தர்கா குளம் கீழ்கரை பகுதியில் உள்ள சாலை உள்வாங்கி இருப்பதை படத்தில் காணலாம்.

    தொடர் மழையால் நாகூர் தர்கா குளத்தின் கரையோரத்தில் சாலை உள்வாங்கியது

    தொடர் மழையால் நாகூர் தர்கா குளத்தின் கரையோரத்தில் உள்ள சாலை உள்வாங்கியது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
    நாகூர்:

    புரெவி புயல் காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த 5 நாட்களாக கன மழை பெய்தது. இந்த மழையினால் பல்வேறு இடங்களில் சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகுந்தது. வயல்களில் மழைநீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காணப்படுகிறது.

    நாகையை அடுத்த நாகூர் தர்கா குளத்தின் தென்கரை பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இடிந்து விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மேலும் உடைப்பு ஏற்படாமல் இருக்க மண் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன.

    இந்த நிலையில் கனமழை காரணமாக நேற்று முன்தினம் இரவு தர்கா குளத்தின் கிழக்கு பகுதியில் சுற்றுசுவரின் கரை பகுதியில் சாலை திடீரென உள்வாங்கியது. இதனால் சுற்றுச்சவர் சேதமடைந்தது. பயங்கர சத்தத்துடன் சாலை உள்வாங்கியதால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்களை வீடுகளில் இருந்து நள்ளிரவில் வெளியேற்றப்பட்டனர். மேலும் அந்த பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டது.

    இதுகுறித்து தகவல் அறிந்த நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் உத்தரவின் பேரில் நாகை நகராட்சி ஆணையர் ஏகராஜ், தாசில்தார் கமலாதேவி, வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து ஆய்வு செய்தனர்.

    நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தர்கா குளம் தெருவில் 4 பாதைகளும் தடுப்புகள் வைத்து அடைத்தனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் தர்கா குளத்தின் சுற்றுச்சுவர் எந்த நேரமும் இடிந்து விழும் நிலையில் உள்ள அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×