search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாகப்பட்டினம் கலெக்டர் பிரவீன் நாயர்
    X
    நாகப்பட்டினம் கலெக்டர் பிரவீன் நாயர்

    நாகை மாவட்டத்தில் நிவர் புயலால் 450 மின்கம்பங்கள் சேதம் - கலெக்டர் தகவல்

    நிவர் புயலால் நாகை மாவட்டத்தில் 450 மின்கம்பங்கள் சேதம் அடைந்துள்ளதாக.மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் செய்திக் குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது :-

    வங்கக்கடலில் உருவான நிவர் புயல் கடந்த 25-ந் தேதி இரவு புதுச்சேரியில் கரையை கடந்தது. புயல் முன்எச்சரிக்கைக்காக நாகை மாவட்டத்தில் 9 பல்நோக்கு நிவாரண மையங்கள், 22 புயல் பாதுகாப்பு மையங்கள் உள்பட 221 பொது மற்றும் தனியார் கட்டிடங்களில் 59 ஆயிரத்து 171 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தனர். நாகை மாவட்டத்தில் நிவர் புயலில் 137 குடிசை வீடுகள் பகுதி சேதமும், 6 குடிசை வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்தன. 7 ஓட்டு வீடுகள் பகுதி சேதம் அடைந்தன. 4 மாடுகள், 12 கன்றுகள் மற்றும் 22 ஆடுகள் உயிரிழந்துள்ளன. சேதமடைந்த வீடுகளுக்கும் உயிரிழந்த கால்நடைகளுக்கும் அரசு விதிகளின்படி உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    மேலும் புயலில் 450 மின்கம்பங்கள், 58 மின் மாற்றிகள் சேதம் அடைந்தன. அதில் 398 மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டுள்ளன. 26 மின் மாற்றிகள் சரி செய்யப்பட்டுள்ளன. மீதிஉள்ள மின் கம்பங்கள் மற்றும் மின்மாற்றிகளை விரைவில் சரி செய்திட துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    பொதுமக்களை மழைக்கால நோய்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் 87 மருத்துவ முகாம்களும், 67 நடமாடும் மருத்துவ முகாம்களும் அமைக்கப்பட்டன. அதில் 6, 238 பேர் சிகிச்சை பெற்று பயன் அடைந்தனர். மேலும் 42 நடமாடும் கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அதில் 1,500 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×