search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகர் கலெக்டர்
    X
    விருதுநகர் கலெக்டர்

    மாவட்டம் முழுவதும் தொகுதி மேம்பாட்டு பணிகள் தொடர்ந்து முடக்கம் - கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

    விருதுநகர் மாவட்டத்தில் தொகுதி மேம்பாட்டு திட்ட பணிகளை குறித்த காலக்கெடுவுக்குள் முடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
    விருதுநகர்:

    மத்திய, மாநில அரசுகள் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை ஒவ்வொரு ஆண்டும் ஒதுக்கீடு செய்து வருகிறது. மத்திய அரசு ஒவ்வொரு எம்.பி.க்கும் ரூ.5 கோடியும், தமிழக அரசு ரூ.2½ கோடியும் ஒதுக்கீடு செய்து வருகிறது. கொரோனா பாதிப்பு காரணமாக மத்திய அரசு தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்து விட்ட நிலையில் தமிழக அரசு இதை தொடர்ந்து ஒதுக்கீடு செய்து வருகிறது.

    தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மக்களின் கோரிக்கை அடிப்படையில் தேவைக்கேற்ப மக்கள் பிரதிநிதிகள் தங்கள் தொகுதியில் திட்ட பணிகளை மேற்கொள்கின்றனர்.

    இதற்கான நிதி ஒதுக்கீடு ஊரக வளர்ச்சி முகமை மூலம் செய்யப்பட்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கும், அரசுத்துறைகளுக்கும் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும் திட்டப்பணிகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.

    ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒதுக்கீடு செய்யப்பட்ட திட்டப்பணிகள் இன்னும் முடிவடையாத நிலை உள்ளது. உலக வளர்ச்சி முகமை இதனை முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்காததால் அரசு துறைகளும் உள்ளாட்சி அமைப்புகளும் திட்டப்பணிகளை குறித்த காலக்கெடுவுக்குள் முடிக்காமல் தாமதப்படுத்தும் நிலை தொடர்கிறது. இதனால் பாதிக்கப்படுவது பொதுமக்கள்தான்.

    விருதுநகரில் பெருமாள் கோவில் தெருவில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சத்தில் ரேஷன் கடை கட்டுவதற்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டும் இந்த பணி இன்னும் தொடங்கப்படாத நிலையே நீடிக்கிறது.

    வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை, நகராட்சி நிர்வாகம் ஆகிய மூன்று துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு திட்ட பணியை நிறைவேற்ற வேண்டிய நிலையில் 3 துறையினரும் ஒவ்வொரு காலகட்டத்தில் திட்டப் பணியை தொடங்குவதற்கு தடையாக இருந்து வருகின்றனர்.

    மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டும் இதற்கான நடவடிக்கைகள் முடக்கப்பட்ட நிலையிலேயே உள்ளது. இதேநிலையில் மேலும் பல்வேறு திட்ட பணிகள் முடங்கியுள்ள நிலையில் உள்ளன.

    எனவே மாவட்ட நிர்வாகம் கடந்த நிதியாண்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இன்னும் முடிவடையாத நிலையில் உள்ள திட்டப்பணிகளை கண்டறிந்து அவற்றை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

    திட்டப்பணிகள் தாமதமாகும் பட்சத்தில் பொதுமக்கள் பாதிக்கப்படுவதோடு, மத்திய, மாநில அரசுகளுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. எனவே இப்பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
    Next Story
    ×