search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகன்களிடம் இருந்து ரூ.1 கோடி சொத்துக்களை மீட்டு ஆவணங்களை உதவி கலெக்டர் கணேஷ் ரேணுகோபாலிடம் வழங்கினார்.
    X
    மகன்களிடம் இருந்து ரூ.1 கோடி சொத்துக்களை மீட்டு ஆவணங்களை உதவி கலெக்டர் கணேஷ் ரேணுகோபாலிடம் வழங்கினார்.

    மகன்களுக்கு எழுதி கொடுத்த ரூ.1 கோடி சொத்துக்கள் மீண்டும் முதியவரிடம் ஒப்படைப்பு

    சாப்பாடு கொடுக்காமல், கவனிக்காததால் மகன்களுக்கு எழுதி கொடுத்த ரூ.1 கோடி சொத்துக்கள் மீட்டு மீண்டும் முதியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை கிராமத்தை சேர்ந்தவர் ரேணுகோபால் (வயது82). இவருக்கு ரூபசுந்தரி, மலர்விழி, லலிதா ஆகிய மகள்களும், கருணாகரன், வெங்கடேசன், வேல்முருகன் ஆகிய 3 மகன்களும் உள்ளனர்.

    கடந்த 2008-ம் ஆண்டு ரேணுகோபாலின் மனைவி கோமளேஸ்வரி இறந்துவிட்டார்.

    ரேணுகோபால் ரைஸ்மில் நடத்தி அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்ந்து வந்தார். இதற்கிடையே ரேணுகோபாலுக்கு வயது முதிர்வு காரணமாக, அவரது மகன்கள் உங்களை நாங்கள் அனைவரும் சேர்ந்து நல்லமுறையில் பார்த்து கொள்வோம் எனக்கூறி, ரூ.1 கோடி மதிப்பிலான ரைஸ்மில், வீடு, நிலம் உள்ளிட்ட அனைத்து சொத்துக்களையும் தானசெட்டில்மெண்ட்டாக எழுதி வாங்கி கொண்டனர்.

    ஆனால் சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்ட பிறகு 3 மகன்களும், தந்தை ரேணுகோபாலை சரிவர கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. உணவு, அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காமல் துன்புறுத்தி, வீட்டை விட்டு துரத்தியுள்ளனர்.

    இதையறிந்த 3 மகள்களும், தங்களது தந்தை ரேணுகோபாலை கவனித்து வந்துள்ளனர். இதற்கிடையே சொத்தை எழுதி வாங்கிக்கொண்டு வீட்டை விட்டு துரத்தியதால், மகன்களுக்கு எழுதிக்தொடுத்த தானசெட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்து மீண்டும் தனது பெயரில் பத்திரப்பதிவு செய்து தரும்படி வேலூர் உதவி கலெக்டர் கணேஷிடம் ரேணுகோபால் புகார் செய்தார்.

    அதன்பேரில்உதவி கலெக்டர் கணேஷ், 3 மகன்களையும் அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது 3 மகன்களும் தந்தை ரேணுகோபாலிடமிருந்து சொத்தை எழுதி வாங்கி கொண்டு பராமரிக்காமல் பரிதவிக்கவிட்டது தெரியவந்தது.

    இதையடுத்து பெற்றோர் மூத்த குடிமக்கள் பாதுகாப்பு மற்றும் நலவாழ்வு சட்டம் பிரிவு 4(1) மற்றும் 23(1) கீழ் 3 மகன்களுக்கு எழுதிக்கொடுத்த அனைத்து சொத்துக்களையும் ரத்து செய்து மீண்டும் ரேணுகோபால் பெயருக்கே மாற்றிட உத்தரவிட்டார்.

    அதற்கான ஆவணங்களை உதவி கலெக்டர் கணேஷ் ரேணுகோபாலிடம் வழங்கினார்.

    இது தொடர்பாக உதவி கலெக்டர் கணேஷ் கூறியதாவது:-

    சொத்துக்களை எழுதி வாங்கிக்கொண்ட பின்னர், பிள்ளைகளால் கைவிடப்படும் பெற்றோர்கள், எந்தநேரமும் தனது அலுவலகத்தை அணுகி புகார் அளிக்கலாம்.

    மேலும் நேரில் வரமுடியாதவர்கள் பதிவு தபால் மூலமாகவும் புகார்களை அனுப்பலாம். புகார் மீது உரிய விசாரணை நடத்தி, தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

    இதுபோன்று வேலூர் மாவட்டத்தில் இதுவரை 35 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 2 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது.

    அதேநேரம், சொத்தை மீட்டு ஒப்படைக்கப்பட்ட பெற்றோருக்கு அவர்களின் பிள்ளைகளாலும், மற்றவர்களாலும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் உரிய பாதுகாப்பு அளிக்க சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×