search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வாக்காளர் பட்டியல்
    X
    வாக்காளர் பட்டியல்

    வேலூர் மாவட்டத்தில் 12 லட்சத்து 34 ஆயிரம் வாக்காளர்கள்

    வேலூர் மாவட்டத்திற்கான வரைவு வாக்காளர் பட்டிலை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டார். இதில், 12 லட்சத்து 34 ஆயிரத்து 864 வாக்காளர்கள் உள்ளனர்.
    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சண்முகசுந்தரம் வேலூர் மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் வெளியிட்டார். பின்னர் கலெக்டர் கூறியதாவது:-

    வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் 6 லட்சத்து 109 ஆண்கள், 6 லட்சத்து 34 ஆயிரத்து 639 பெண்கள், 116 மூன்றாம் பாலினத்தவர்கள் என்று மொத்தம் 12 ஆயிரத்து 34 ஆயிரத்து 864 வாக்காளர்கள் உள்ளனர். ஆண்களைவிட 34 ஆயிரத்து 530 பெண்கள் அதிகமாக உள்ளனர். குடியாத்தம் (தனி) சட்டமன்ற தொகுதியில் அதிகபட்சமாக 2 லட்சத்து 81 ஆயிரத்து 399 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    வரைவு வாக்காளர் பட்டியல் 605 வாக்குச்சாவடி மையங்கள், உதவி கலெக்டர் அலுவலகங்கள், வேலூர் மாநகராட்சி அலுவலகம், தாசில்தார் அலுவலகங்கள், நகராட்சி அலுவலகங்கள் உள்பட 616 மையங்களில் அடுத்த மாதம் (டிசம்பர்) 15-ந் தேதி வரை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. இந்த பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா? என்று பார்வையிட்டு பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.

    616 மையங்களிலும் பெயர் சேர்க்க (படிவம்-6), பெயர் நீக்கம் செய்ய (படிவம்-7), பெயர் திருத்தம் செய்ய (படிவம்-8), சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்ய (படிவம்-8 ஏ) விண்ணப்பங்கள் வழங்கப்படுகிறது. விண்ணப்பத்தில் பொதுமக்கள் சமீபத்தில் எடுக்கப்பட்ட வண்ண புகைப்படத்தை ஒட்டி சமர்ப்பிக்க வேண்டும். வாக்காளர் அடையாள அட்டை கிடைக்காதவர்கள் மீண்டும் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளிக்க கூடாது. 18 வயது நிரம்பிய மாணவர்கள் www.nvsp.in என்ற தேசிய இணையதளத்தின் மூலமாகவோ, செல்போனில் voter Helpline App பதிவிறக்கம் செய்து எளிய முறையில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம்.

    நகல் வாக்காளர் அடையாள அட்டை பெற தாசில்தார் அலுவலகத்தில் 001 சி படிவம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். வருகிற 21,22-ந் தேதிகள் மற்றும் அடுத்த மாதம் 12,13-ந் தேதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

    அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராகவன் மற்றும் பலர் உடனிருந்தனர்.
    Next Story
    ×