என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    பர்கூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி 2 கல்லூரி மாணவர்கள் பலி

    பர்கூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதியதில் பெங்களூருவை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியானார்கள்.
    பர்கூர்:

    கர்நாடக மாநிலம் பெங்களூரு மெஜஸ்டிக் லட்சுமணபுரி பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாத். இவரது மகன் பால் எபினேசர் (வயது 22). இவரது நண்பர்கள் பெங்களூரு கத்ரகுப்பே பகுதியை சேர்ந்த பாபு (20), புனித்பாபு (18). இவர்கள் அனைவரும் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தனர்.

    இவர்களது மற்றொரு நண்பரான காட்டன்பேட் பகுதியில் உள்ள பிரிண்டிங் பிரசில் வேலை செய்யும் லட்சுமணபுரியை சேர்ந்த கமலேசன்(19) என 4 பேரும் 2 மோட்டார் சைக்கிள்களில் சென்னையில் உள்ள பால் எபினேசரின் உறவினர் பிறந்தநாள் விழாவில் பங்கேற்க நேற்று முன்தினம் இரவு 12.30 மணிக்கு பெங்களூருவில் இருந்து புறப்பட்டனர்.

    பால் எபினேசர், பாபு ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளிலும், புனித்பாபு, கமலேசன் ஆகியோர் மற்றொரு மோட்டார் சைக்கிளிலும் சென்று கொண்டிருந்தனர். கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணகிரி அடுத்த ஒரப்பம் அருகே உள்ள வெத்தலைதோட்டம் என்ற பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலை 2.30 மணி அளவில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது பால் எபினேசர், பாபு சென்ற மோட்டார் சைக்கிளின் மீது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், கந்திகுப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி, சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தினால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்து கந்திகுப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×