என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுவிட்ச்
    X
    சுவிட்ச்

    மழைக்காலத்தில் மின் சாதனங்களை கையாள்வது எப்படி?- பொதுமக்களுக்கு விளக்கம்

    மழைக்காலத்தில் மின்சாதனங்களை கையாள்வது எப்படி? என்பது குறித்து பொதுமக்களுக்கு மின்துறை விளக்கம் அளித்துள்ளது.
    புதுச்சேரி:

    எதிர்வரும் வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக பொதுமக்களின் பாதுகாப்பு அம்சங்களை கருத்தில்கொண்டு பேரிடர் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்கள் என்னென்ன தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்? மின் சாதனங்களை எவ்வாறு கையாண்டு விபத்துகளை தவிர்ப்பது எப்படி? என்பது தொடர்பாக மின்துறை செயற்பொறியாளர் ராமநாதன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மின் கம்பங்களில் பந்தல், கொடிக்கம்பி கயிறு மற்றும் மாடு முதலியவற்றை கட்டக்கூடாது. மின்துறை மேல்நிலை கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை அகற்ற மின்துறை அலுவலர்களை அணுகவேண்டும். இடி மின்னல் விழும்போது தண்ணீர் தேங்கியுள்ள பகுதியில் நிற்கக்கூடாது. மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் தொட முயற்சிக்க வேண்டாம்.

    அதேபோல் இடி மின்னல் இருக்கும்போது டி.வி., கம்ப்யூட்டர், தொலைபேசி போன்றவற்றை பயன்படுத்த வேண்டாம். மின்மாற்றிகள், மின்பெட்டிகள், மின் இழுவை கம்பிகள் ஆகியவற்றை தொடக்கூடாது. கனரக வாகனங்களை மின் கம்பங்கள், மின்மாற்றிகள் அருகில் நிறுத்தி பொருட்களை ஏற்றவோ, இறக்கவோ கூடாது. மின்சாரத்தால் ஏற்படும் தீயை தண்ணீரை ஊற்றி அணைக்க முயற்சிக்காமல் தீயணைப்புத்துறையின் உதவியை நாடவேண்டும்.

    வீட்டின் சுவர்களில், மின் சாதனங்களில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால் உலர்ந்த ரப்பர் காலணி அணிந்து மெயின் சுவிட்சை அணைத்துவிட்டு மின்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். சைக்கிள் செயின், கம்பிகள், பச்சை கொடிகள், ஈரமான பூமாலை போன்றவற்றை மின் கம்பிகளில் தூக்கி எறிவது ஆபத்தை விளைவிக்கும்.

    பழுதான மின் சாதனங்களை பயன்படுத்தக்கூடாது. உடைந்த சுவிட்ச், பிளக், பியூஸ் போன்றவற்றை உடனடியாக மாற்றவேண்டும். மின்சார சார்ஜரில் இணைப்பில் இருக்கும்போது செல்போனை பயன்படுத்தக் கூடாது. தரை கழுவும்போது ஈரக் கைகளால் இணைப்பில் இருக்கும் மின்விசிறி போன்றவற்றை நகர்த்தக் கூடாது. கிரைண்டர் போன்ற உபகரணங்களுக்கு தனியாக நில இணைப்பு (எர்த்) கொடுக்கவேண்டும். மின்மோட்டார், தண்ணீர் பம்பு மோட்டார் போன்றவற்றின் மீது மழைநீர் படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×