search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
    X
    லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

    பல்லாவரம் நகராட்சி-மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

    பல்லாவரம் நகராட்சி அலுவலகம் மற்றும் மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக சோதனை நடத்தினர். பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில தீபாவளி பண்டிகையையொட்டி, வசூல் வேட்டை கொடிகட்டி பறப்பதாக தொடர்ந்து புகார் எழுந்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புதுறை போலீசார், கூடுதல் துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் தலைமையில் 11 பேர் கொண்ட குழுவினர் நேற்று மாலை 4.50 மணிக்கு பல்லாவரம் நகராட்சி அலுவலகத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர்.

    லஞ்ச ஒழிப்பு போலீசார் அலுவலகத்துக்குள் நுழைந்ததும் மெயின் கேட் மூடப்பட்டது. பொதுமக்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் அலுவலகத்தில் இருந்து யாரும், வெளியே செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.

    நகராட்சி அலுவலக முதல் தளத்தில் உள்ள நகரமைப்பு பிரிவில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.2 லட்சத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர். பின்னர் அது தொடர்பாக அத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 5 மணி நேரத்துக்கும் மேலாக விசாரணை நடைபெற்றது.

    இந்த நகராட்சி அலுவலகத்தில் இதேபோல் கடந்த ஆண்டும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி நகரமைப்பு பிரிவில் இருந்து கணக்கில் வராத பணத்தை கைப்பற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதேபோல் ஆலந்தூரில் சென்னை மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள மீனம்பாக்கம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று மாலை லஞ்ச ஒழிப்புதுறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் உள்பட லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் திடீரென சோதனை செய்தனர்.

    அலுவலகத்தில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களின் செல்போன்கள் அணைத்து வைக்கப்பட்டன. அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியாற்றிய அறைகள் முழுவதும் சோதனை செய்தனர். 5 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தியும் பணம் எதுவும் சிக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஆவணங்களில் முறைகேடு எதுவும் நடந்து உள்ளதா? என அதிகாரிகள் தொடர்ந்து சோதனை செய்தனர்.
    Next Story
    ×