search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கவர்னர் கிரண்பேடி
    X
    கவர்னர் கிரண்பேடி

    காவலர் தேர்வுக்கான திருத்தப்பட்ட அட்டவணை- கவர்னர் உத்தரவு

    திருத்தப்பட்ட அட்டவணையை தயார் செய்து காவலர் தேர்வுகளை நடத்த கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
    புதுச்சேரி:

    புதுவை காவல்துறையில் காவல் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்காக கடந்த 2018-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக பணி நியமனம் செய்யப்படாமல் தள்ளிப் போனது. இந்த நிலையில் அரசு சார்பில் காலியாக உள்ள 431 காவலர் பணியிடங்களை நிரப்ப அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதற்கான உடல் தகுதி தேர்வுகள் வருகிற 4-ந்தேதி முதல் தொடங்க இருந்தது. ஆனால் இந்த தேர்வின்போது ஓட்டப்பந்தய நேரத்தை எலக்ட்ரானிக் சிப் முறையை பயன்படுத்தி கணக்கிடுவதற்கு பதிலாக மாற்று முறை (விசில்) பயன்படுத்துவதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.

    இதுதொடர்பாக புகார்கள் தெரிவிக்கப்பட்டதையடுத்து காவலர் தேர்வினை நிறுத்தி வைக்க கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டார். சம்பந்தப்பட்ட கோப்புகளை தன்னிடம் கொண்டுவருமாறு தலைமை செயலாளருக்கும் அவர் உத்தரவிட்டார். கவர்னரின் இந்த அதிரடி நடவடிக்கை புதுவை மாநில இளைஞர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

    இந்தநிலையில் காவலர் பணியிட கோப்புகளை ஆய்வு செய்த கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு உத்தரவிட்டபடி அப்போது அறிவிக்கப்பட்டபடியே தேர்வுகளை நடத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் மாற்றம் செய்வதற்கு ஒப்புதல் அளிக்கப்படவில்லை.

    தேர்வுத்துறையானது புதிய திருத்தப்பட்ட அட்டவணை தயார் செய்து உடல்தகுதி தேர்வு மற்றும் எழுத்து தேர்வுகளை நடத்த வேண்டும். இதுதொடர்பாக விண்ணப்பித்தவர்களுக்கும் தகவல் தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×