search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை, பணம் திருட்டு
    X
    நகை, பணம் திருட்டு

    திட்டக்குடி அருகே விவசாயி, கல்லூரி ஊழியர் வீட்டில் 111 பவுன் நகைகள் கொள்ளை

    திட்டக்குடி அருகே விவசாயி, கல்லூரி ஊழியர் வீட்டில் 111 பவுன் நகைகளையும், ரூ.7¼ லட்சம் ரொக்கத்தையும் மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
    ராமநத்தம்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள ராமநத்தம் ஆலம்பாடி ரோட்டுத்தெருவை சேர்ந்தவர் மணி (வயது 65). விவசாயி. இவருடைய மனைவி சாந்தி (55), மகன் சத்தியராஜ். கடந்த 40 நாட்களுக்கு முன்பு தான் சிங்கப்பூரில் இருந்து சத்தியராஜ் திருமணம் செய்வதற்காக ஊருக்கு வந்திருந்தார்.

    திருமணத்திற்கு தேவையான நகை, பணத்தையும் அவர்கள் சேகரித்து வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்தனர். இதுதவிர சத்தியராஜியின் அக்காள் நகைகளும் அவர்களது வீட்டில் தான் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 3 பேரும் வீட்டு வராண்டாவில் படுத்து தூங்கினர். அப்போது மர்ம நபர்கள், மணி வீட்டின் பக்கவாட்டில் இருந்த மர ஜன்னலை கடப்பாரையால் உடைத்தனர். பின்னர் அதன் வழியாக உள்ளே புகுந்த கொள்ளையர்கள், வீட்டை உள்பக்கமாக பூட்டினர்.

    தொடர்ந்து வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 74 பவுன் நகைகள், ரூ.6 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றனர்.

    நேற்று காலை எழுந்தபோது தான் ஜன்னல் உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து வீட்டில் இருந்த பீரோவை பார்த்த போது, அது உடைக்கப்பட்டு, அதில் இருந்த நகை, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இதேபோல் அதேதெருவில் வசித்து வரும் தனியார் கல்லூரி ஊழியர் வீட்டிலும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டி உள்ளனர். இதன் விவரம் வருமாறு:-

    ஆலம்பாடி ரோட்டுத்தெருவை சேர்ந்த சாமிதுரை மகன் ராம்குமார்(39). இவர் தொழுதூரில் உள்ள தனியார் கல்லூரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி செந்தாமரை (30), தாய் ஜோதி (60). நேற்று முன்தினம் 3 பேரும் வீட்டில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தனர்.

    அப்போது நள்ளிரவில் ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த 2 பீரோவையும் உடைத்தனர். பின்னர் அதில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்தனர். மற்றொரு பீரோ வீட்டு வராண்டாவில் இருந்தது. இதை உடைத்தால் வெளியில் சத்தம் கேட்கும் என நினைத்த கொள்ளையர்கள் அதை லாவகமாக வெளியே தூக்கிச்சென்றனர். பின்னர் வீட்டு பின்புறம் உள்ள வயல்வெளியில் போட்டு, அதை உடைத்து, அதில் இருந்த நகை, பணம் மற்றும் வெள்ளிப்பொருட்களையும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இதில் மொத்தம் 37 பவுன் நகைகள், வெள்ளிப்பொருட்கள், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கொள்ளை போய் இருந்தது. இதை காலையில் எழுந்து பார்த்த ராம்குமார் குடும்பத்தினர், அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் 2 வீட்டாரும் இது பற்றி ராமநத்தம் போலீசில் தனித்தனியே புகார் செய்தனர்.

    அதன்பேரில் திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற விசாரணை நடத்தினார். இது தவிர கடலூரில் இருந்து மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. மோப்பநாய் வீட்டில் இருந்து மோப்பம் பிடித்தபடி அதர்நத்தம் ரோட்டை நோக்கி ஓடியது. அது தொடர்ந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

    இதற்கிடையில் கடலூர் தடயவியல் நிபுணர்கள் வினோத்குமார், தசரதன் தலைமையிலான குழுவினர் 2 வீடுகளில் இருந்த முக்கிய தடயங்களை சேகரித்தனர். இது தொடர்பாக ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 வீடுகளில் கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இதற்காக நியமிக்கப்பட்ட தனிப்படை போலீசாரும் அவர்களை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×