search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    புரட்டாசி மாதம் முடிந்ததால் இறைச்சி மீன் கடைகளில் குவிந்த மக்கள்

    புரட்டாசி மாதம் முடிவடைந்ததையொட்டி நேற்று தர்மபுரியில் இறைச்சி, மீன் கடைகளில் மக்கள் குவிந்தனர். இதனால் விற்பனை படுஜோராக நடைபெற்றது.
    தர்மபுரி:

    புரட்டாசி மாதம் முழுவதும் பெரும்பாலானோர் இறைச்சி சாப்பிடாமல் பெருமாளை வழிபடுவது வழக்கம். புரட்டாசி மாதம் முடிவடைந்து ஐப்பசி மாதம் பிறந்து முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று தர்மபுரி நகரில் இறைச்சி, மீன் விற்பனை படுஜோராக நடைபெற்றது. அதிகாலை முதலே கடைகளில் இறைச்சி, மீன்கள் வாங்க மக்கள் குவிந்தனர். தர்மபுரி சந்தைப்பேட்டையில் உள்ள நகராட்சி ஆடு அடிக்கும் தொட்டி, பஸ் நிலையத்தை சுற்றி உள்ள சாலைகள் மற்றும் நகரில் உள்ள முக்கிய இறைச்சி கடைகளில் ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி வாங்க ஏராளமானோர் குவிந்தனர்.

    தர்மபுரி நகரில் உள்ள பெரும்பாலான கடைகளில் இறைச்சி விலை சற்று கூடுதலாக இருந்தாலும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். ஆட்டு இறைச்சி ஒரு கிலோ ரூ.700 முதல் ரூ.750 வரையிலும், பிராய்லர் கோழி இறைச்சி ஒரு கிலோ ரூ.160 முதல் ரூ.180 வரையிலும், ஒரிஜினல் நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.430 வரையிலும், பண்ணையில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழி ஒரு கிலோ ரூ.250-க்கும் விற்பனையானது.

    இதேபோன்று தர்மபுரி மார்க்கெட், முகமது அலி கிளப் ரோடு மற்றும் ராஜகோபால் கவுண்டர் தெரு உள்ளிட்ட பகுதிகளில் மீன் விற்பனையும் படுஜோராக நடைபெற்றது. கட்லா மீன் ஒரு கிலோ ரூ.180-க்கும், ரோகு மீன் ஒரு கிலோ ரூ.150-க்கும், பாறை மீன் ஒரு கிலோ ரூ.140-க்கும், கெளுத்தி மீன் ஒரு கிலோ ரூ.120-க்கும், ஜிலேபி மீன் ஒரு கிலோ ரூ.90-க்கும் விற்பனையானது. இதேபோல் வஞ்சிரம் உள்ளிட்ட கடல் மீன்களும் அதிகளவில் விற்பனை ஆனது. இறைச்சி விற்பனை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு குறைவாகவே இருந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    Next Story
    ×