search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கறம்பக்குடி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு செடிகள் நன்கு வளர்ந்திருப்பதை காணலாம்
    X
    கறம்பக்குடி பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மரவள்ளிக்கிழங்கு செடிகள் நன்கு வளர்ந்திருப்பதை காணலாம்

    தண்ணீர் பற்றாக்குறையால் மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் ஆர்வம் காட்டும் விவசாயிகள்

    தண்ணீர் பற்றாக்குறையால், கறம்பக்குடி பகுதியில் மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
    கறம்பக்குடி:

    கறம்பக்குடி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் தஞ்சாவூர் மாவட்டம் அருகே உள்ள 10 ஊராட்சிகள் காவிரி பாசன பகுதிகள் ஆகும். மற்ற ஊராட்சிகள் வானம் பார்த்த பூமியாகவே உள்ளன. இந்த ஆண்டு கறம்பக்குடி பகுதியில் பருவமழை போதிய அளவு பெய்யாததால் ஏரி, குளங்கள் வறண்டு கிடக்கின்றன. நிலத்தடி நீர்மட்டமும் வெகுவாக குறைந்து விட்டது.

    இதனால், தண்ணீர் அதிகம் தேவைப்படும் நெல், கரும்பு, வாழை உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையால் இந்த ஆண்டு மரவள்ளிக் கிழங்கு சாகுபடியில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

    அந்தவகையில் கறம்பக்குடி ஒன்றியத்தில் உள்ள அம்புக்கோவில், ரெகுநாதபுரம், சூரக்காடு, வெட்டன் விடுதி, தட்டாஊரணி, குளந்திரான்பட்டு மற்றும் கந்தர்வகோட்டை தாலுகாவில் உள்ள மங்களாகோவில், வெள்ளாள விடுதி, மட்டங்கால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிக்கிழங்கு அதிகம் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ள விவசாயி ஒருவர் கூறுகையில், நிலத்தடி நீரை நம்பியே எங்கள் பகுதிகளில் விவசாயம் செய்து வருகிறோம். மழை போதிய அளவு பெய்யாததால் நீர்மட்டம் 500 அடிக்கு கீழே சென்று விட்டது. தண்ணீர் பற்றாக்குறையால் மரவள்ளி கிழங்கு சாகுபடியில் ஈடுபட்டுள்ளோம். இவற்றிற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படுவதில்லை. பராமரிப்பு செலவும் குறைவாகவே உள்ளது. இந்த ஆண்டு செடிகளும் நன்கு செழித்து வளர்ந்துள்ளன. விளைச்சல் அதிகரிக்கும் நிலையில் நல்ல விலையும் கிடைக்குமென எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என கூறினார்.

    மேலும் அவர் கூறுகையில், இங்கு விளைவிக்கப்படும் மரவள்ளி கிழங்குகள் சேலம், நாமக்கல் பகுதிகளை சேர்ந்த ஜவ்வரிசி ஆலைகளுக்கு கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் கடந்த ஆண்டு சில வியாபாரிகள் குழு அமைத்து கொண்டு குறைந்த விலையில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்து லாபம் பார்த்தனர்.

    இதனால், விவசாயிகள் நஷ்டம் அடையும் நிலை ஏற்பட்டது. இதை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
    Next Story
    ×