search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    புதிய கட்டிடத்துக்கு அனுமதி வழங்க காலதாமதம் - வங்கி கடனை செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதி

    ஊட்டி நகராட்சியில் புதிய கட்டிடம் கட்ட அனுமதி வழங்க காலதாமதமாகி வருவதால் வங்கி கடனை செலுத்த முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து உள்ளனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கட்டிடங்கள் கட்டுவதை வரைமுறைப்படுத்த மலை மேலிட பாதுகாப்பு விதிமுறைகள் வகுக்கப்பட்டது. அதன்படி 7 மீட்டர் உயரத்துக்கு மேல் கட்டிடம் கட்டக்கூடாது, குடியிருப்புக்கு என அனுமதி பெற்றுவிட்டு வணிக நோக்கில் கட்டிடத்தை பயன்படுத்தக்கூடாது என்பன உள்பட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

    ஊட்டி நகராட்சியில் புதிய கட்டிடம் கட்ட ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். அதன்பிறகு நகர திட்டமைப்பு அலுவலர் ஆய்வு செய்து, உரிய அனுமதி வழங்குவார். மேலும் கனிம மற்றும் சுங்க வளத்துறையிடம் இருந்து தடையில்லா சான்று பெற வேண்டும். சமீபத்தில் ஊரடங்கு உத்தரவால் ஊட்டியில் கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

    அதன்பிறகு ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதையடுத்து புதிய கட்டிடங்களுக்கு அனுமதி கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை பலருக்கு கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்படவில்லை. விண்ணப்பத்தின் அடிப்படையில் நகர திட்டமைப்பு அலுவலர், ஆய்வாளர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு செய்கின்றனர். இருப்பினும் அனுமதி வழங்க காலதாமதம் ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. விதிமுறைகளுக்கு உட்பட்டு புதிதாக கட்டிடம் கட்ட விண்ணப்பித்தவர்கள் தங்களுக்கு அனுமதி கிடைத்துவிடும் என்ற எண்ணத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வங்கிகளில் வீட்டு கடன் வாங்கி உள்ளனர். ஆனால் அனுமதி கிடைக்காததால் வங்கிகளில் உரிய நேரத்தில் கடனை திருப்பி செலுத்தவோ அல்லது வட்டி கட்டவோ முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து புதிய கட்டிடம் கட்ட அனுமதி கேட்டு விண்ணப்பித்த பொதுமக்கள் கூறியதாவது:-

    ஊட்டி நகராட்சியில் கட்டிட அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது. ஆவணங்களை முறையாக சமர்ப்பித்தும் அனுமதி வழங்கவில்லை. இதனால் நாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம். கட்டிடம் கட்டுவதற்காக வங்கிகளில் வாங்கிய கடனுக்கு வீணாக வட்டி கட்ட வேண்டிய நிலை உள்ளது. அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணி நடந்தால் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் அனுமதி கிடைத்தால்தான் வெளி மாவட்டங்களில் இருந்து கட்டுமான பொருட்களை கொண்டு வர முடியும். எனவே உரிய நேரத்தில் கட்டிட அனுமதி கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள். இதுகுறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, ஊட்டியில் கட்டிட அனுமதி வழங்க கனிம மற்றும் சுங்க வளத்துறையில் அதிகாரிகள் இல்லாமல் இருந்தது. தற்போது அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இனிவரும் காலங்களில் கட்டிட அனுமதி வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
    Next Story
    ×