என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ரெட்டிச்சாவடி அருகே மூதாட்டி கொலை வழக்கில் வாலிபர் கைது

    ரெட்டிச்சாவடி அருகே மூதாட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
    நெல்லிக்குப்பம்:

    கடலூர் அடுத்த ரெட்டிச்சாவடி அருகே உள்ள சந்திக்குப்பத்தை சேர்ந்தவர் பரமசிவம். இவரது மனைவி அய்யம்மாள் (வயது 75). வீட்டில் தனியாக வசித்து வந்த அய்யம்மாளுக்கு, அவரது பேத்தி புதுவை மாநிலம் வில்லியனூரை சேர்ந்த ஆனந்தி, சம்பவத்தன்று சாப்பாடு கொடுப்பதற்காக வந்தார். அப்போது அய்யம்மாள் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார்.

    உடனே இதுபற்றி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் விரைந்து சென்று, அய்யம்மாள் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    பின்னர் இந்த கொலை வழக்கில் துப்பு துலக்குவதற்காக கடலூரில் இருந்து மோப்ப நாய் அர்ஜூன் அழைத்து வரப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி, அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் வரை ஓடிச்சென்று நின்றது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அந்த வீட்டுக்குள் சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு கத்தி ஒன்று கிடந்தது. மேலும் அந்த வீட்டுக்குள் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மறைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே போலீசார், அவரை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த வெங்கடாஜலபதி(30) என்பதும், மனநலம் பாதிக்கப்பட்ட இவர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து நடத்திய விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த அய்யம்மாளின் உறவினர் மகள், வேறு சமுதாயத்தை சேர்ந்த வாலிபரை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

    இதை அய்யம்மாள் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டனர். இதன் காரணமாக உறவினர் பெண்ணும், அவரது கணருவம் அய்யம்மாள் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றுள்ளனர். இதை பார்த்த வெங்கடாஜலபதி, வேறு சமுதாயத்தை சேர்ந்த வாலிபரை ஏன் வீட்டுக்குள் விடுகிறாய் என கூறி அய்யம்மாளுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததும், அதன் காரணமாக அவரை கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடாஜலபதியை கைது செய்தனர்.
    Next Story
    ×