search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சிவகங்கையில் மறியலில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்பட 120 பேர் கைது

    சிவகங்கையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளான் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து கட்சிகள் சார்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 11 பெண்கள் உள்பட 120 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகங்கை:

    மத்திய அரசு கடந்த நாடாளுமன்ற கூட்ட தொடரில் புதிய வேளான் மசோதாவை நிறைவேற்றியது. இதில் விவசாயிகளுக்கு எதிரான அம்சங்கள் உள்ளதாக கூறி அனைத்து எதிர்க்கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் பல்வேறு பகுதிகளில் போராட்டமும் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் தி.மு.க., ம.தி.மு.க, கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்ளிட்ட அனைத்து கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    சிவகங்கையில் நடைபெற்ற போராட்டத்தில் அனைத்து விவசாயிகள் சங்கத்தின் பொறுப்பாளர்கள், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளருமான கே.வீரபாண்டி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் புலவர் செவந்தியப்பன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் கண்ணகி, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட முன்னாள் தலைவர் ராஜரெத்தினம், மார்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராமலிங்க பூபதி, சிவகங்கை ஒன்றிய செயலாளர் உலகநாதன், காளையார்கோவில் ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு, கண்ணன், கார்கண்ணன், மதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அனைத்து கட்சி பிரமுகர்கள் சிவகங்கை அரண்மனை வாசலில் இருந்து ஊர்வலமாக சென்று எம்.ஜி.ஆர். சிலை அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 11 பெண்கள் உட்பட 120 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×