search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    நாட்டறம்பள்ளி அருகே ஆந்திர மலை கிராமத்தில் யானை மிதித்து மாணவி பலி

    நாட்டறம்பள்ளி அருகே ஆந்திர மலை கிராமத்தில் யானை மிதித்து பிளஸ்-2 மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
    நாட்டறம்பள்ளி:

    நாட்டறம்பள்ளி அருகே மலையனூர் மலை கிராமத்தையொட்டி ஆந்திர மாநிலம் பருத்தி கொல்லை கிராமம் உள்ளது.

    இந்த கிராமத்தை சேர்ந்தவர் முருகன் இவரது மகள் சோனியா (வயது17). அங்குள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நிலக்கடலை பயிரிட்டுள்ளனர்.

    இங்கு காட்டுப்பன்றிகள் அதிகளவு வந்து தொல்லை கொடுத்தது. மேலும் அந்த பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று சுற்றி திரிகிறது.

    நேற்று விவசாய நிலத்தில் நிலக்கடலை அறுவடை செய்தனர். இரவு காட்டுப்பன்றி காவலுக்காக முருகனின் மனைவி மற்றும் மகள் சோனியா ஆகியோர் விவசாய நிலத்தில் காவலுக்கு இருந்தனர்.

    நள்ளிரவில் அயர்ந்து தூங்கிவிட்டனர். அப்போது ஒற்றை காட்டு யானை நிலத்திற்குள் புகுந்தது. இதனைக் கண்ட முருகனின் மனைவி யானையை விரட்ட முயற்சி செய்து கத்திக் கூச்சலிட்டார்.

    அப்போது தூங்கிக்கொண்டிருந்த சோனியாவை ஒற்றை யானை மிதித்தது. இதில் உடல் நசுங்கிய மாணவி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    சிறிது நேரம் அங்கேயே இருந்த காட்டுயானை காட்டுப்பகுதிக்குள் சென்றுவிட்டது.

    தனது கண் முன்னே யானை மகளை மிதித்துக் கொன்றதைக் கண்ட முருகனின் மனைவி அழுது துடித்தார்.

    மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சித்தூர் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மாணவியின் உடல் குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது.

    தொடர்ந்து ஒற்றை காட்டு யானை நாட்டறம்பள்ளி ஒட்டியுள்ள தமிழக ஆந்திர எல்லை வனப்பகுதியில் சுற்றி திரிகிறது. அடர்ந்த காட்டுக்குள் யானையை விரட்ட வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    Next Story
    ×