என் மலர்
செய்திகள்

கோப்பு படம்.
வேலூர் ரங்காபுரத்தில் கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து வாலிபர் பலி
வேலூர் ரங்காபுரத்தில் கட்டுமான பணியின்போது கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி, ரங்காபுரம் பகுதியில் பாதாள சாக்கடை குழாய்கள் அமைக்கப்பட்டு வருகிறது. பாதாள சாக்கடை குழாய்கள் மூலம் வரும் கழிவுநீரை சேகரிக்க ரங்காபுரம் வசந்தம்நகரில் 21 அடி ஆழத்தில் தொட்டி அமைக்க அந்த பகுதியில் மிகப்பெரிய பள்ளம் தோண்டப்பட்டது. அங்கு முதல்கட்டமாக 20 அடி அகலத்தில் 15 அடி உயரத்துக்கு சிமெண்டு, கம்பிகளை கொண்டு தொட்டி அமைக்கப்பட்டது. சத்துவாச்சாரி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக அந்த தொட்டியில் 7 அடிக்கு மழைநீர் தேங்கி கிடந்தது.
தொட்டியின் மீதமுள்ள 6 அடி உயரத்துக்கு சுவர் எழுப்பும் பணி நடைபெற்றது. இந்த பணியில் ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகேயுள்ள பாலகிருஷ்ணாபுரத்தை சேர்ந்த நித்யா (வயது 32) மற்றும் அப்பகுதியை சேர்ந்த 5 பேர் நேற்று காலை வழக்கம் போல் ஈடுபட்டிருந்தனர். அப்போது நித்யாவிற்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், நிலைதடுமாறிய அவர் தொட்டிக்குள் தவறி விழுந்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சகதொழிலாளர்கள் அவரை தேடினர். ஆனால் அவர்களால் நித்யாவை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து தீயணைப்புத்துறையினர், சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வேலூர் தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று தொட்டியில் இறங்கி தேடினர். சிறிதுநேரத்தில் நித்யா பிணமாக மீட்கப்பட்டார்.
அவரின் கழுத்தில் கம்பி குத்தியிருந்தது. அதையடுத்து அவருடைய உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






