என் மலர்
செய்திகள்

கொள்ளை
ஆற்காட்டில் நிதி நிறுவனங்களின் பூட்டை உடைத்து ரூ.1¾ லட்சம் திருட்டு
ஆற்காட்டில் 2 நிதி நிறுவனங்களின் பூட்டை உடைத்து ரூ.1¾ லட்சத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆற்காடு:
ஆற்காட்டை அடுத்த தாஜ்புரா பகுதியைச் சேர்ந்தவர் குலசேகரன் (வயது 35), கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சரண்ராஜ் (32). இவர்கள் 2 பேரும் ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலை தோப்பு கானா பகுதியில் உள்ள ஒரு கட்டிடத்தின் முதல் மாடியில் தனித்தனியாக நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனர்.
நேற்று மதியம் 2 பேரும் நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு, சாப்பிடுவதற்காக வீட்டிற்கு சென்றனர். பின்னர் ஒரு மணி நேரம் கழித்து வந்து பார்த்த போது, குலசேகரன் நிதி நிறுவனத்தின் கண்ணாடி கதவு உடைக்கப்பட்டிருந்தது. மேஜை டிராயரில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் திருடப்பட்டிருந்தது.
அதேபோன்று சரண்ராஜ் மேஜை டிராயரில் வைத்திருந்த ரூ.48 ஆயிரமும் திருடப்பட்டிருந்தது.
இதுகுறித்து 2 பேரும் தனித்தனியாக ஆற்காடு டவுன் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று மாலை ஆற்காட்டில் இருந்து ஆரணி செல்லும் சாலையில் உப்புபேட்டை அருகே சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.50 ஆயிரத்தை அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் எடுத்து திமிரி போலீசில் ஒப்படைத்துள்ளார். இந்த பணம் நிதி நிறுவனத்தில் இருந்து திருடிச்சென்ற நபர்கள், சாலையில் தவறவிட்டுவிட்டார்களா? அல்லது வேறு யாராவது தவற விட்டு சென்று விட்டார்களா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story