என் மலர்tooltip icon

    செய்திகள்

    இருசக்கர வாகன ஷோரூமில்  ஏற்பட்ட தீயை அணைக்கும் வீரர்கள்
    X
    இருசக்கர வாகன ஷோரூமில் ஏற்பட்ட தீயை அணைக்கும் வீரர்கள்

    ஓசூரில் இருசக்கர வாகன ஷோரூமில் தீ விபத்து- வாகனங்கள் எரிந்து சேதம்

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருசக்கர வாகன ஷோரூமில் ஏற்பட்ட தீவிபத்தில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் சேதம் அடைந்தது.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை நட்சத்திர ஓட்டல் எதிரில் தினேஷ் (வயது32) என்பவருக்கு சொந்தமான இருசக்கர வாகன ஷோரூம் உள்ளது.

    இங்கு பணிபுரியும் ஊழியர்கள் நேற்று இரவு வழக்கம் போல் ஷோரூமை பூட்டி விட்டு சென்றனர். நள்ளிரவு திடீரென ஷோரூமில் இருந்து புகை வந்தது. பின்னர் சிறிது நேரத்தில் பயங்கரமாக தீ பற்றி எரிந்தது. தீ மளமளவென்று நாலாபுறமும் பரவியது.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனே தீயணைப்புத்துறை, போலீசார் மற்றும் கடையின் உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ஷோரூமில் சர்வீசுக்காக விடப்பட்ட 20-க்கும் மேற்பட்ட வாகனங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தீயில் கருகின.

    இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பில் சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக இந்த தீ விபத்து நேர்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×