search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    சிவகாசி அருகே தேமுதிக பிரமுகர் கொலை - கூலிப்படையை ஏவி கொன்ற கள்ளக்காதலியின் சகோதரி

    சிவகாசி அருகே தே.மு.தி.க. பிரமுகர் கொலையில் கூலிப்படையினர் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லை சேர்ந்தவர் சங்கிலிராஜன் (வயது 48). இவர் திருத்தங்கல் -விருதுநகர் சாலையில் அரிசி கடை நடத்தி வந்தார்.

    மேலும் திருத்தங்கல் நகர தே.மு.தி.க. செயலாளராகவும் பதவி வகித்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களாக கட்சி பணியில் ஈடுபடாமல் விலகி இருந்தார்.

    இவருக்கு முத்து ராமலட்சுமி (45) என்ற மனைவியும், ராஜலட்சுமி (19) என்ற மகளும், உதயச்சந்திரன் (12) என்ற மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் திருத்தங்கல்-அதிவீரன்பட்டி ரோட்டில் நேற்று சங்கிலிராஜன் வெட்டுக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சம்பவ இடத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சங்கிலிராஜன் கொலை செய்யப்பட்டது ஏன்?கொலையாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    இதில், அவருக்கு அந்த பகுதியைச் சேர்ந்த ராம திலகம் என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த பெண் குறித்து விசாரணை நடத்தினர்.

    இதில், கள்ளக்காதலியின் சொத்து தகராறு தொடர்பாக கொலை நடந்து இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:-

    திருத்தங்கல்லைச் சேர்ந்த சோலையம்மாள் டீச்சர் என்பவருக்கு ரூ.3 கோடி அளவில் சொத்துக்கள் இருந்துள்ளன. அவருக்கு வாரிசு இல்லாததால் தனது தங்கையின் மகன்கள் பவுன்ராஜ், பாலமுருகன் ஆகியோருக்கு சொத்துக்களை கொடுத்துள்ளார்.

    இந்த சொத்து தொடர்பாக பவுன்ராஜ் மகள் ராமதிலகத்திற்கும், அவரது சித்தியான பாலமுருகனின் மனைவியான லதாவுக்கும் தகராறு ஏற்பட்டது.

    இதுகுறித்து சங்கிலிராஜனிடம் ராமதிலகம் கூறி உள்ளார். அதனை தொடர்ந்து கள்ளக்காதலியின் சித்தி லதாவை சந்தித்து சங்கிலிராஜன் பேசி உள்ளார். இது லதாவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இந்த சொத்து விவகாரத்தில்தான் சங்கிலிராஜன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதினர்.

    மேலும் கொலை சம்பவம் தொடர்பாக கூலிப்படையைச் சேர்ந்த சிவகாசி முத்துமாரி காலனி வி.பி.ராஜா (51), இட்லி என்ற வினோத் கண்ணன் (38), ஆலமரத்துப்பட்டி கூல் என்ற ராபின் (25), திருத்தங்கல் முனீஸ்வரன் காலனி சாலைமணி (38) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவான லட்சம் என்ற லட்சுமணமூர்த்தியை தேடி வருகின்றனர்.

    கூலிப்படையினர் சங்கிலிராஜனை நேற்று ஆலமரத்துப்பட்டி பாலத்தின் கீழ் பகுதியில் அழைத்து சென்று கொலை செய்துள்ளனர். பின்னர் உடலை அங்கேயே போட்டு விட்டு தப்பிச்சென்றனர்.

    மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    தொடர்ந்து போலீசார் சொத்து விவகாரத்தில் லதா தூண்டுதலின்பேரில் கொலை நடந்ததா? அல்லது வேறு யாராவது பின்னணியில் உள்ளனரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×