search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விருதுநகர் கலெக்டர் கண்ணன்
    X
    விருதுநகர் கலெக்டர் கண்ணன்

    விருதுநகர் மாவட்டம் முழுவதும் 14 கட்டுப்பாட்டு பகுதிகள் - கலெக்டர் கண்ணன் அறிவிப்பு

    விருதுநகர் மாவட்டத்தில் 14 பகுதிகளை நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக கலெக்டர் கண்ணன் அறிவித்துள்ளார்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வர மாவட்ட நிர்வாகம் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்து வருகிறது.மாவட்டத்தில் அதிகபட்சமாக 177 பகுதிகள் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 14 பகுதிகள் மட்டுமே நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுநகர், காரியாபட்டி தாலுகாக்களில் நோய் கட்டுப்பாட்டு பகுதிகள் ஏதும் இல்லை.

    ராஜபாளையம் தாலுகாவில் சொக்கநாதன்புதூர், மேலத்துரைச்சாமி புரம், தேவதானம் ஆகிய பகுதிகளும், ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகாவில் மானகசேரி முத்துலிங்காபுரமும், சிவகாசி தாலுகாவில் பேர்நாயக்கன் பட்டியும், வெம்பக்கோட்டை தாலுகாவில் புலிப்பாறைப்பட்டி, கொங்கன் குளம் ஆகிய பகுதிகளும் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அருப்புக்கோட்டை தாலுகாவில் வில்லிபத்திரி, சுத்தமடம் ஆகிய பகுதிகளும், திருச்சுழி தாலுகாவில் வி.கரிசல்குளம், நாலூர், ஒட்டன்குளம், மினாகுளம் ஆகிய கிராமங்களும், சாத்தூரில் பாரதிநகரும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் மக்கள் நடமாட்டத்திற்கும், வணிக செயல்பாட்டிற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் விதிமுறைகளை கண்காணிக்க, நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அதிகாரிகளும், போலீசாரும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள கிராமங்களை கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள பல கிராமங்களை கட்டுப்பாட்டு பகுதி பட்டியலில் இடம்பெற செய்யாதது ஏன்? என்று தெரியவில்லை. இருந்தபோதிலும் இந்த கிராமங்களில் கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

    இந்தநிலையில் கலெக்டர் கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூயிருப்பதாவது:- மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் கடந்த மாதத்தில் மிக அதிக அளவில் மக்கள் பாதிக்கப்பட்டு பெரும்பாலானோர் சிகிச்சை பெற்று குணம் அடைந்துள்ளனர்.இம்மாவட்டத்தில் 1.6 சதவீதம் இறப்பும் ஏற்பட்டு தற்போது பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழக அரசின் அறிவுரைகளின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு மாவட்ட மக்கள் அளித்த ஒத்துழைப்பே முக்கிய காரணமாகும். மேலும் சில காலத்திற்கு நோய் தொற்று அபாயநிலை குறைய மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்திய அடிப்படையில் தற்காப்பு நடவடிக்கைகளான முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், திருமண நிகழ்ச்சி, துக்க நிகழ்வுகளில் 50-க்கும் மேற்பட்டவர்கள் கூடாமல் இருத்தல் அவசியம் ஆகும்.

    மேலும் கிராமப்பகுதியில் ஆண்டு வருமானம் ரூ.10 ஆயிரத்துக்கும் உட்பட்ட வழிபாட்டு தலங்கள் மட்டுமே திறந்து வழிபட வேண்டும். இனிவரும் காலங்களிலும் மாவட்ட மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தால் மாவட்டம் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமாக திகழும்.அதற்கு மாவட்ட மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×