என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடத்தல்
    X
    கடத்தல்

    புதுக்கோட்டையில் காதல் திருமணம் செய்த மகளை கடத்திய பெற்றோர்

    புதுக்கோட்டையில் காதல் திருமணம் செய்த மகளை பெற்றோர் கடத்தியதாக எஸ்.பி.யிடம் காதலன் புகார் அளித்துள்ளார்.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை காந்தி நகரை சேர்ந்தவர் அருண் (வயது 26). இவர் பட்டுக்கோட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் அரியலூரை சேர்ந்த பிரியா என்பவருக்கும் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது. பிரியா ஒரத்தநாட்டில் உள்ள கல்லூரியில் படித்து வந்ததால் இருவரும் சந்தித்து பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

    இதையறிந்த பிரியாவின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், அவருக்கும் வேறு ஒரு மாப்பிள்ளையை பார்த்து திருமணம் செய்து வைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

    இதுபற்றி தனது காதலன் அருணை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நடந்த விவரத்தை பிரியா தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அருண், தனது நண்பருடன் அரியலூர் சென்று பிரியாவை புதுக்கோட்டைக்கு அழைத்து வந்தார். பின்னர் திருவரங்குளம் கோவிலில் வைத்து இருவரும் கடந்த 29-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர்.

    இந்தநிலையில் அருண் பெற்றோரிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பிரியாவின் உறவினர்கள் கடந்த 30-ந்தேதி வந்தனர். ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. நேற்று பிரியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் கார்களில் அருண் வீட்டிற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் பிரியாவை பெற்றோர் மற்றும் உறவினர்கள் காரில் கடத்தி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து அருண், புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணனிடம் புகார் செய்தார். அதில் தனது காதல் மனைவியை அவரது பெற்றோர் கடத்தி சென்று விட்டனர். எனவே பிரியாவை மீட்டு என்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

    எஸ்.பி. உத்தரவின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் திருமணம் செய்த மகளை பெற்றோரோ கடத்தி சென்ற சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×