search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்
    X
    நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக்கோரி விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்

    விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் - விருத்தாசலம் அருகே பரபரப்பு

    விருத்தாசலம் அருகே நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விரைந்து திறக்கக்கோரி விவசாயிகள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
    விருத்தாசலம்:

    விருத்தாசலம் அருகே கருவேப்பிலங்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 1,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துள்ளனர். சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களை விவசாயிகள் தற்போது அறுவடை செய்து விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் விற்பனை நிலையம் மற்றும் தனியார் நெல் வியாபாரிகளிடம் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில் விருத்தாசலம் அடுத்த கொடுமனூர் உள்பட மாவட்டத்தில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் விற்பனை நிலையம் திறக்கப்பட்டு, வியாபாரிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இதை அறிந்த கருவேப்பிலங்குறிச்சி பகுதி விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் அறுவடை செய்த நெற்பயிர்களை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக வயல்களில் குவியல், குவியலாக கொட்டி பாதுகாத்து வந்தனர்.

    கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தாங்கள் அறுவடை செய்த நெல்லை விவசாயிகள் குவித்து வைத்துள்ளதால் அவ்வப்போது பொழிகின்ற மழையில் நெல் குவியல்கள் நனைந்து முளைத்து வருகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை விரைந்து திறக்க மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தனர். இருப்பினும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் விருத்தாசலம் பகுதியில் பெய்த மழையால் விவசாயிகள் விற்பனைக்காக கொட்டி வைத்திருந்த நெல்கள் நனைந்து வீணானது.

    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி விவசாயிகள் கொடுமனூர் உழவர் மன்ற தலைவரும், வக்கீலுமான அறிவழகன் தலைமையில் நெல் கொட்டி வைத்திருந்த இடத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் கொடுமனூரில் நேரடி நெற்களை கொள்முதல் நிலையத்தை விரைந்து திறக்கக்கோரி கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், ஓரிரு நாட்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனை ஏற்ற விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×