search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமைச்சர் காமராஜ்
    X
    அமைச்சர் காமராஜ்

    நெல் கொள்முதல் 30 லட்சம் டன்னை விரைவில் எட்டும்- அமைச்சர் தகவல்

    நெல் கொள்முதல் 30 லட்சம் டன் என்ற அளவை விரைவில் எட்டும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.
    மன்னார்குடி:

    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நகராட்சி சார்பில் சந்தைபேட்டை பஸ் நிலையத்தில் மருத்துவ முகாம் நடந்தது. முகாமிற்கு திருவாரூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் கமல்கிஷோர் தலைமை தாங்கினார்.

    மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியகோட்டி, நகராட்சி ஆணையர் கமலா, ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், நகரசபை முன்னாள் தலைவர் சிவா.ராஜமாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சுகாதார இணை இயக்குனர் விஜயகுமார் வரவேற்றார்

    உணவுத்துறை அமைச்சர் காமராஜ், முகாமை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முககவசம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் இலக்காக 28 லட்சம் டன் நிர்ணயிக்கப்பட்டது. இந்த அளவை கடந்து நெல் கொள்முதல் 30 லட்சம் டன் என்ற அளவை விரைவில் எட்டும். நெல் கொள்முதல் மூலமாக 4 லட்சத்து 63 ஆயிரம் விவசாயிகள் நேரடியாக பயன் அடைந்துள்ளனர்.

    கொள்முதல் செய்யாமல் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதாக வந்த தகவலில் உண்மை இல்லை. லாப நோக்கில் இடைத்தரகர்கள் சிலர் வேண்டும் என்றே தவறான தகவல்களை பரப்புகிறார்களோ என்ற சந்தேகம் வருகிறது.

    கடந்த 32 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட கல்வி கொள்கையில் தற்போது மத்திய அரசு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் எப்போதும் எதிர்மறை கருத்துகளை தெரிவிப்பவர். அவர் கூறுவது போல அரசு திடீரென புதிய கல்வி கொள்கை குறித்து கருத்துகளை தெரிவிக்கமுடியாது.

    புதிய கல்வி கொள்கை குறித்து ஆய்வு செய்து அதன் அடிப்படையில்தான் தமிழக அரசு கருத்து தெரிவிக்கும். 

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×