என் மலர்
செய்திகள்

காண்டாமிருக வண்டு
காண்டாமிருக வண்டுகளை அழிப்பது எப்படி?- வேளாண்மைத்துறை அதிகாரிகள் விளக்கம்
காண்டாமிருக வண்டுகளை அழிப்பது எப்படி? என்பது குறித்து ஆனைமலை வேளாண்மை துறை அதிகாரிகள் விளக்கம் அளித்து உள்ளனர்.
பொள்ளாச்சி:
காண்டாமிருக வண்டுபொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பகுதியில் தென்னை அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. மழைக்காலத்தில் காண்டாமிருக வண்டு தாக்குதல் தென்னையில் மகசூல் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் மரங்களை வெட்ட வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்த ஆனைமலை வேளாண்மை அலுவலகத்தில் மெட்டாரைசியம் அனிசோபிலியே என்கிற பூஞ்சானம் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறியதாவது:-
காண்டாமிருக வண்டுகளின் வளர்ச்சி நிலை நான்கு பருவங்களாக உள்ளன. மழைக்காலங்களில் தென்னந்தோப்பில் மாட்டு சாண எருக்குழி மற்றும் தோப்பில் போடப்பட்ட மக்கிய உரத்தின் அடிப்பகுதியில் 5 முதல் 15 செ.மீ. ஆழம் வரையில் சென்று முட்டையிடுகின்றன. முட்டைகள் புழுவாகி, கூட்டுப்புழுவாக மாறுகின்றன. மழைக்காலத்தில் தான் காண்டாமிருக வண்டுகள் கூட்டுப்புழு பருவத்தில் இருந்து வண்டுகளாக வெளியே வரும்.
மழைக்காலம் முடிவதற்குள் மீண்டும் முட்டைகள் இடும். ஒரு பெண் காண்டாமிருக வண்டு 150 முட்டைகள் வரை இடும். இந்த வண்டுகள் தென்னை மரங்களில் உள்ள இளம் குருத்துபகுதிகளை துளையிட்டு உள்ளே சென்று மொட்டுபகுதியை சாப்பிடும். இதனால் 15 சதவீதம் வரை மகசூல் குறையும். காண்டாமிருக வண்டு தாக்கிய பகுதிகளில் பூஞ்சானம் பிடித்து குருத்தழுகல் நோய் ஏற்படும். சிவப்பு கூன் வண்டு தாக்குதலால் மகசூல் பாதிக்கப்பட்டு மரங்கள் அழிந்து விடும். காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்த மெட்டாரைசியம் அனிசோபிலியே என்கிற பூஞ்சானம் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது ஆனைமலை வேளாண்மை துறை அலுவலகத்தில் 250 கிலோ பூஞ்சானம் இருப்பு உள்ளது. ஒரு கிலோ ரூ.135-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பூஞ்சானத்தை எருக்குழியில் கலந்து காண்டாமிருக வண்டுகளை அழிக்கலாம். இரவு நேரங்களில் ஏக்கருக்கு ஒரு விளக்கு பொறி வைக்க வேண்டும். ஒரு கிலோ ஆமணக்கு புண்ணாக்கை, 5 லிட்டர் நீரில் கரைத்து ஏக்கருக்கு 5 இடங்களில் பானையில் வைக்க வேண்டும். மேலும் 15 நாட்களுக்கு ஒரு முறை பானையில் ஆமணக்கை மாற்ற வேண்டும். இந்த முறைகளை கடைப்பிடித்து தென்னை தாக்கும் காண்டாமிருக வண்டுகளை அழிக்கலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Next Story






