என் மலர்
செய்திகள்

ஈரோடு கோட்டை முனியப்பன் கோவில் வீதியில் தூய்மை பணியாளர்கள் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்த போது எடுத்த படம்.
ஈரோட்டில் 4 ஆண்டுகளுக்கு பின்னர் தூர்வாரப்பட்ட சாக்கடை கால்வாய்
ஈரோட்டில் 4 ஆண்டுகளுக்கு பின்னர் சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி கடந்த 3 நாட்களாக நடந்து முடிக்கப்பட்டது.
ஈரோடு:
ஈரோடு கோட்டை முனியப்பன் கோவில் வீதியில் இருந்து தில்லைநகர் வரை வீட்டுக்கழிவுகள் செல்வதற்கு வசதியாக சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கால்வாய் கடந்த 4 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கிடந்தது. இதனால் சாக்கடை கால்வாயில் மண், பிளாஸ்டிக் பொருட்களால் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நின்றது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் போது அதிக அளவில் துர்நாற்றம் வீசி வந்தது. மேலும் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் இருந்தது.
அதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாக்கடை கால்வாயை தூர்வாரக்கோரி பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் 4 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி கடந்த 3 நாட்களாக நடந்தது. தற்போது சாக்கடை கால்வாய்க்குள் கிடந்த மண் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் அகற்றப்பட்டு ரோட்டில் போடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் மீன்ராஜா என்கிற ராஜசேகர் கூறும்போது, ‘கோட்டை முனியப்பன் கோவில் வீதியில் இருந்து தில்லைநகர் வரை உள்ள சாக்கடை கால்வாய் கடந்த 4 ஆண்டுகளாக தூர்வாரப்படாமல் கிடந்தது. இடுப்பளவு ஆழம் உள்ள இந்த சாக்கடை கால்வாய் தூர்வாரப்படாததால் நிரம்பி கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நின்றது.
தற்போது இந்த சாக்கடை கால்வாய் தூர்வாரப்பட்டு உள்ளது. மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் முதல் நாளில் 16 பேரும், 2-வது நாளில் 12 பேரும், 3-வது நாளில் 13 பேரும் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 6 டிராக்டர் அளவுள்ள மண் சாக்கடை கால்வாய்க்குள் இருந்து அள்ளி ரோட்டில் கொட்டப்பட்டு உள்ளது. இந்த மண்ணை விரைந்து எடுத்துச்செல்ல வேண்டும்’ என்றார்.
Next Story






