என் மலர்
செய்திகள்

கோப்புபடம்
கூடலூரில் நடுரோட்டில் பழுதடைந்து நின்ற டேங்கர் லாரி - 1 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு
கூடலூரில் டீசல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி நடுரோட்டில் பழுதாகி நின்றது. இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடலூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து சரக்கு லாரிகளில்தினமும் அத்தியாவசிய பொருட்கள் கொண்டு வரப்படுகிறது. இந்த நிலையில் கோவையில் இருந்து டீசல் எரிபொருள் நிரப்பிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று கூடலூர் வழியாக மசினகுடிக்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது கூடலூர் ஸ்டேட் வங்கி எதிரே வந்து கொண்டிருந்த போது திடீரென டேங்கர் லாரியின் முன்பக்க டயர் பஞ்சராகி நடுரோட்டில் நின்றது.
இதனால் லாரியின் பின்னால் வந்த மற்ற வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து தடைபட்டது. மேலும் கூடலூர் மைசூரு தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக நின்றது.
தகவலறிந்த கூடலூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் லாரி டிரைவர் மற்றும் கிளனரிடம் உடனடியாக வேறு டயரை பொருத்தி லாரியை எடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்தினர். இதனிடையே சாலையின் நடுவில் தடுப்பு கற்கள் வரிசையாக இருந்ததால் வாகனங்களை திருப்பி விட முடியாத நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து ஊட்டி சாலையில் நின்றிருந்த சிறிய ரக கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் மட்டும் பின்னோக்கி இயக்கப்பட்டது. ஆனால் கனரக வாகனங்கள் செல்ல முடியாமல் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து சாலையின் மறுபுறம் சிறிய வாகனங்கள் இயக்கப்பட்டது. இதனால் எதிரே வந்த வாகனங்கள் கூடலூர் பழைய பஸ் நிலைய பகுதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்களை இயக்கும்படி போக்குவரத்து போலீசார், டிரைவர்களை அறிவுறுத்தி கொண்டிருந்தனர்.
இதனால் நிலைமைக்கு ஏற்ப வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு ஆமை வேகத்தில் இயக்கப்பட்டது.இந்த சமயத்தில் லாரி டிரைவர் மாற்று டயரை பொருத்தும் பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து பகல் 1.15 மணிக்கு டேங்கர் லாரியில் நல்ல நிலையில் உள்ள டயர் பொருத்தப்பட்டது. பின்னர் டேங்கர் லாரி அங்கிருந்து ஓட்டி செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story






