search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் பணியாளர்கள் மலர் செடிகளை நடவு செய்யும் காட்சி
    X
    ஊட்டி தாவரவியல் பூங்காவில் பணியாளர்கள் மலர் செடிகளை நடவு செய்யும் காட்சி

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2 லட்சம் மலர் செடிகள் நடவு பணி தொடக்கம்

    2-வது சீசனையொட்டி ஊட்டி தாவரவியல் பூங்காவில் 2 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கியது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா தலமாக திகழ்கிறது. ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் 2-வது சீசன் நடைபெறுகிறது. சீசனில் பூங்காவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டு உள்ளன. சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கோடை சீசன், கண்காட்சிகள் நடைபெறவில்லை.

    ஊட்டியில் சுற்றுலா தலங்கள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய நிலையில் காணப்படுகிறது. இருப்பினும் 2-வது சீசனுக்கான பணிகள் பூங்காக்களில் நடைபெற்று வருகின்றன. கோடை சீசனின் போது பூத்து ஓய்ந்த மலர்களில் இருந்து விதைகள் சேகரிக்கப்பட்டு, நர்சரியில் வளர்த்து பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 2-வது சீசனையொட்டி மலர் செடிகள் நடவு செய்யும் பணி தொடங்கி உள்ளது. இதற்காக நடைபாதை ஓரங்கள், பூந்தொட்டிகள், மலர் பாத்திகள், மரங்களை சுற்றிலும் தயார்படுத்தப்பட்டு இருக்கிறது.

    பிரஞ்சு மேரிகோல்டு, இன்கா மேரிகோல்டு, சால்வியா, பிகோனியா, டையான்தஸ், பெட்டுனியா, ஆஸ்டர், ஜீனியா, டேலியா, பிளாக்ஸ், கேலண்டுலா, செல்லோசியா உள்பட 140 ரகங்களை சேர்ந்த 2.3 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு வருகிறது. ஜப்பான் பூங்கா, இத்தாலியன் பூங்கா, புது பூங்கா உள்ளிட்ட இடங்களில் பணியாளர்கள் ஊட்டியில் பெய்து வரும் மழையை பொருட்படுத்தாமல் கம்பளி ஆடைகளை அணிந்த படி நடவு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் 5 ஆயிரம் பூந்தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட உள்ளது.

    நடவு செய்யப்படும் மலர் செடிகளில் வருகிற செப்டம்பர் மாதம் பூக்கள் பூக்கத் தொடங்கும், பெரிய புல்வெளி மைதானத்தில் புற்கள் அதிகமாக வளர்ந்துள்ளதால், அதை சமமாக வெட்டி பராமரிக்கும் பணி நடந்து வருகிறது. மலர் செடிகள் நன்றாக வளரும் வகையில் மண்புழு உரம் இடப்படுகிறது. இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறும்போது, ஊரடங்கு உத்தரவால் தாவரவியல் பூங்கா மூடப்பட்டு உள்ளது. இருப்பினும் 2-வது சீசனுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் தான் உள்ளது. ஊரடங்கு தளர்த்தப்பட்டால் உடனடியாக பூங்காவை தயார் செய்ய முடியாது. எனவே, தற்போது மலர் செடிகளை நடவு செய்து வருகிறோம் என்றார்.
    Next Story
    ×