search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஞ்சா கடத்தல் தொடர்பாக கைதான 4 பேரை படத்தில் காணலாம்.
    X
    கஞ்சா கடத்தல் தொடர்பாக கைதான 4 பேரை படத்தில் காணலாம்.

    வேதாரண்யம் அருகே காரில் கடத்தப்பட்ட 300 கிலோ கஞ்சா பறிமுதல் - 4 பேர் கைது

    வேதாரண்யம் அருகே காரில் கடத்தப்பட்ட 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வநாகரெத்தினம், வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா ஆகியோர் உத்தரவின் பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் தனிப்படையினர் வேதாரண்யம் அருகே தோப்புத்துறை மற்றும் தேத்தாகுடியில் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது தோப்புத்துறை ஆறுமுகச்சந்து பகுதியில் இருந்து குரவப்புலம் செல்லும் சாலையில் தேத்தாகுடி தெற்கு ஏரி வடகரை பகுதியில் வேகமாக வந்த ஒரு காரை போலீசார் வழிமறித்தனர்.

    போலீசாரை கண்டதும் காரை அங்கேயே நிறுத்தி விட்டு அதில் வந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் பிடிபட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி, காரையும் சோதனையிட்டனர். விசாரணையில் பிடிபட்ட நபர் தேத்தாகுடி தெற்கு பகுதியை சேர்ந்த நந்தகோபால்(வயது 23) என்பதும், தப்பி ஓடியவர்கள் தென்னம்புலத்தை சேர்ந்த டிரைவர் கனகராஜ்(24), தேத்தாகுடி தெற்கு கிராமத்தை சேர்ந்த குணசேகரன் என்பதும் தெரியவந்தது. காரில் கத்தி, அரிவாள், சுளுக்கி, இரும்பு கம்பி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் இருந்தன. 10 பிளாஸ்டிக் பைகளில் 300 கிலோ கஞ்சா காரில் கடத்தி வரப்பட்டதும் தெரிய வந்தது. இதன் மதிப்பு தமிழகத்தில் ரூ.30 லட்சம் என்றும், இதை இலங்கைக்கு கடத்தி சென்று விற்பனை செய்தால் ரூ.1 கோடி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

    பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் கஞ்சா பண்டல்களை படத்தில் காணலாம்.


    தப்பி ஓடிய நபர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினர். அப்போது அதே பகுதியில் தலைமறைவாக இருந்த கனகராஜ் போலீசாரிடம் மாட்டிக்கொண்டார். இதைத்தொடர்ந்து நந்தகோபால், கனகராஜ் ஆகிய 2 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கஞ்சா கடத்தலில் கருப்பம்புலத்தை சேர்ந்த கதிரவன்(37), நாலுவேதபதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி(56) உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

    இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிடிபட்ட நந்தகோபால், கனகராஜ், கதிரவன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சா, கார் மற்றும் ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக குணசேகரன் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
    Next Story
    ×