search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா
    X
    கொரோனா

    நீலகிரியில் கொரோனாவுக்கு விவசாயி பலி - கிராமத்துக்கு சீல் வைப்பு

    நீலகிரியில் கொரோனாவுக்கு விவசாயி பலியானார். இதனால் அவர் வசித்து வந்த கிராமத்துக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த மே மாதம் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் 15-ந் தேதி முதல் வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. மஞ்சூர் அருகே தங்காடு கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முள்ளிகூர் கிராமத்தை சேர்ந்த 72 வயதான மூதாட்டி வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு முன்பு தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மஞ்சூர் அரசு ஆஸ்பத்திரியில் தொடர்ந்து 4 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து ஆஸ்பத்திரியில் பணிபுரிந்த செவிலியர்கள், பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. செவிலியர்கள் 4 பேருக்கு கொரோனா வைரஸ் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யும் பணி நடந்து வருகின்றது. இந்த நிலையில் தங்காடு கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சியில் புது அட்டுபாயில், அத்திக்கல் கிராமங்களை சேர்ந்த சிலர் கலந்து கொண்டனர்.

    இதில் கலந்து கொண்ட ஊட்டி அருகே அத்திக்கல் கிராமத்தை சேர்ந்த 78 வயதான விவசாயி ஒருவர் காய்ச்சல், இருமலால் அவதிப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து அவர் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா சந்தேகத்தின் பேரில் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர்அவரிடம் கொரோனா பரிசோதனைக்காக சளிமாதிரி எடுக்கப்பட்டது. இந்த நிலையில் உடல் நலம் தேறி வருவதாக கூறி வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் திடீரென இறந்தார்.

    இதற்கிடையில் அவரது சளி மாதிரி பரிசோதனை முடிவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அவருக்கு இருந்தது உறுதி செய்யப்பட்டது. ஆகவே திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்த விவசாயி கொரோனாவுக்கு பலியானது தெரியவந்தது. நீலகிரியில் மேலும் ஒரு விவசாயி கொரோனாவுக்கு பலியான சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த நிலையில் அத்திக்கல் கிராமம் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அப்பகுதிக்கு சீல் வைக்கப்பட்டு வெளியாட்கள் உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. அதனைத் தொடர்ந்து மஞ்சூர், புது அட்டுபாயில், அத்திக்கல் ஆகிய மூன்று பகுதிகளில் 150 பேரிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

    ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 24 மணி நேரமும் ஊழியர்கள் சுழற்சி முறையில் பணி புரிந்து வருகின்றனர். இந்த நிலையில் அங்கு பணிபுரிந்து வரும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. தொடர்ந்து அவரிடமிருந்து மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. முடிவு வந்த பின்னர் விவரங்கள் தெரியவரும். இதை அடுத்து நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்த பொதுமக்களை மனுக்கள் கொடுத்து விட்டு உடனடியாக வெளியே செல்லுமாறு ஊழியர்கள் அறிவுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரியில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்து உள்ளது.
    Next Story
    ×