search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைதானவர்களை படத்தில் காணலாம்.
    X
    கைதானவர்களை படத்தில் காணலாம்.

    திருப்புவனம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் 8 பேர் கும்பல் கைது

    திருப்புவனம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் 8 பேர் கொண்ட கும்பலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவர்கள் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை கொல்ல சதித்திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்தது.
    திருப்புவனம்:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட மாங்குடி கிராமம் அருகே உள்ள புதுக்குளம் கண்மாய் பகுதியில் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்து பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாகவும். கிலோ கணக்கில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாகவும், மானாமதுரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் உள்ள மணல் குவாரிகளுக்கு சென்று மிரட்டி பணம் பறித்து வருவதாகவும் தனிப்படை போலீசார் சவுந்திரராஜன், மலைச்சாமி, ராஜா ஆகியோருக்கு ரகசியல் தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அந்த கும்பலை பிடிக்க மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் தலைமையில் மானாமதுரை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஏழுமலை, சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், ராஜ்குமார், மாரிமுத்து மற்றும் மானாமதுரை உட்கோட்டத்தை சேர்ந்த போலீசார் அடங்கிய 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் நேற்று அதிகாலை 5 மணி அளவில் வெவ்வேறு திசைகளில் இருந்து வந்து திருப்புவனம் அருகே புதுக்குளம் கண்மாய்க்கு சென்று அங்கு பதுங்கி இருந்த 7 பேர் கும்பலை பிடித்தனர்.

    அவர்களிடம் நடத்திய விசாரணையில், மதுரை திருநகரை சேர்ந்த ராஜேஷ்கண்ணன் (வயது 32), வினேஷ்(19), திருப்பாசேத்தி அருகே ஆவாரங்காட்டைச் சேர்ந்த குட்டை முருகன் (38) மற்றும் அஜய்தேவன்(20), காளையார்கோவில் காளீஸ்வரன்(23), வேம்பத்தூர் அருகே மிக்கேல்பட்டிணம் ரவி என்ற முகிலன் (21), மதுரை சிம்மக்கல் நவீன் நாகராஜ்(22) ஆகியோர் என்பது தெரியவந்தது.

    அவர்களிடம் இருந்து சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிலான 23 கிலோ கஞ்சா மற்றும் 7 பெரிய வாள்கள், 3 வீச்சரிவாள், 6 செல்போன்கள், 8 மோட்டார் சைக்கிள், ஒரு சூரிகத்தி உள்ளிட்ட ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர். 7 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர். இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் காளீஸ்வரி(27) என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்தனர்.

    இது குறித்து சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) வருண்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கைதான 7 பேரும் முன் விரோதம் காரணமாக எதிர் தரப்பை சேர்ந்த விருதுநகர் மாவட்டம் கட்டனூர் கிராமத்தை சேர்ந்த ஒருவரை கொலை செய்ய பயங்கர ஆயுதங்களுடன் சதி திட்டம் தீட்டியுள்ளனர். இந்த கொலைக்காக இந்த பகுதியில் பதுங்கி இருந்து பணம் சேர்க்கும் முயற்சியில் மிரட்டி பணம் பறிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

    இவர்களை தனிப்படை போலீசார் பிடித்ததால் அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் கொலை தவிர்க்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இவர்களில் சிலர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. மேலும் 2 பேர் கச்சநத்தம் பகுதியில் நடந்த கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளனர். இவர்கள் மேலராங்கியம் கிராமத்தைச் சேர்ந்த லோடுமுருகன் என்பவரின் மனைவி காளீஸ்வரி மற்றும் நாகப்பன் ஆகியோர் தலைமையில் செயல்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. காளீஸ்வரி கைது செய்யப்பட்டுள்ளார்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×