search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணி பதனிடும் ஆலையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைக்கும் பணியில் ஈடுபட்ட காட்சி
    X
    துணி பதனிடும் ஆலையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைக்கும் பணியில் ஈடுபட்ட காட்சி

    சித்தோடு அருகே துணி பதனிடும் ஆலையில் தீ விபத்து

    சித்தோடு அருகே துணி பதனிடும் ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
    பவானி:

    பவானி அருகே சித்தோடு கொங்கம்பாளையத்தில் பழனிசாமி என்பவருக்கு சொந்தமான துணி பதனிடும் ஆலை உள்ளது. இந்த ஆலையில் நேற்று காலையில் வழக்கம்போல் பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்த ஆலையில் திடீரென மின் வினியோகம் தடைபட்டு உள்ளது. பின்னர் மீண்டும் மின் வினியோகம் செய்யப்பட்டது.

    இந்தநிலையில் அந்த ஆலையில் வைத்திருந்த எண்ணெய் பேரல்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து துணி பதனிடும் எந்திரங்களுக்கும் தீ பரவியது. மேலும், துணி பேல்களிலும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அங்கு வேலை செய்து கொண்டிருந்த 50-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடோடி வந்து உயிர்தப்பினார்கள்.

    இதுகுறித்து பவானி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தீ பயங்கரமாக எரிந்து கொண்டு இருந்ததால், தீயை கட்டுக்குள் கொண்டு வர சிரமம் ஏற்பட்டது. தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். ஆலையில் உள்ள எண்ணெய் கொதிகலன் மீது தண்ணீரை அடித்து குளிர்வித்ததால், அது வெடிக்காமல் பாதுகாக்கப்பட்டது. இதனால் மிகப்பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சுமார் 2 மணிநேரம் போராடி தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சித்தோடு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×